தொல்லியல் பயணம்
தொல்லியல் பயணம்
-ஹேமலதா, இளங்கலை அரசியல் அறிவியல், ஈரோடு கலை கல்லூரி
தேதி : 20.9.2026
நிகழ்வு:
ஒரு நாள் பயணம் - பறவை பார்த்தல் மற்றும்
தொல்லியல் பயணம்.
இடங்கள்:
1. வெள்ளோடு
2. பவணந்தி முனிவர் வாழ்ந்த இடம்
3. குமரிக்கல்பாளையம்
4. அகழ்வாராய்ச்சி
5. விஜயமங்கலம் சமணர் கோவில்
6. கொடுமணல்
7. சர்க்கார் பெரியபாளையம் கோவில்
ஆசிரியர்கள்:
திரு. கொங்கு சதாசிவம், திரு. ஈஸ்வர மூர்த்தி.
பயணம் பற்றி
“வெள்ளோட்டில் வானில் சிறகடித்த பறவைகளையும்,
மண்ணுக்குள் புதைந்திருந்த வரலாற்றின் தடங்களையும் தேடிச் சென்ற இப்பயணம், இயற்கையையும்,
தொல்லியலையும் ஒரே நாளில் அறிந்துகொள்ளச் செய்த மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.”
என் அனுபவம்
பயணப் பேருந்து
ஈரோடு பேருந்து நிலையம் வந்தது. ஈரோடு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறை பேருந்து
நிலையம் நோக்கி புறப்பட்டது. அங்கு திருப்பூர் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து வெள்ளோடு
நோக்கி புறப்பட்டது. வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு புதுவிதமான பறவைகளை பார்த்தோம்.
ஆசிரியர் ஈஸ்வர மூர்த்தி அவர்கள் பறவைகள் பற்றிய அறிமுக உரையை எடுத்துரைத்தார். பறவைகளை
எப்படி அடையாளம் காண்பது? அதை எப்படி உற்றுநோக்குவது? என்பதைப் பற்றி கூறினார். தமிழக
பறவைகளின் பெயர், புகைப்படம் கொண்ட அட்டையை எங்களுக்கு கொடுத்தார். தொலைநோக்கி
(Binocular) உதவியுடன் நாங்கள் பறவைகளை பார்த்தோம். நான் தொலைநோக்கியை பயன்படுத்துவது
இதுவே முதல் முறை. ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பறவைகளை அருகில் இருந்து பார்த்த ஒரு
அழகான தருணம். நாம் அன்றாட வாழ்வில் காகம், கிளி, புறா, மயில் இவற்றைத்தான் பார்த்திருப்போம்.
ஆனால் இங்கு புதுவிதமான பறவைகளைக் கண்டோம். அவற்றின் வாழ்வியலை புரிந்து கொண்டோம்.
செப்டம்பர் மாதம் என்பதால் இடப்பெயர்வு (Migration) பறவைகள் அதிகம் இருந்தன.
நாங்கள் பார்த்த பறவைகள்:
•
Darter - பாம்புத்தாரா
•
Pelican - கூழைக்கடா
•
Painted Stork - மஞ்சள் மூக்கு வாத்து
•
Ibis - அரிவாள் மூக்கன்
•
Egret - நீண்ட கால் கொக்கு

இன்னும்
பலவிதமான பறவைகளைப் பார்த்தோம். எனக்குப் பிடித்த பறவை - Darter (பாம்புத்தாரா).
பாம்புத்தாரா
இவை நீண்ட
மற்றும் மெல்லிய கழுத்தும் நேர்க்கூரான அலகும் கொண்டுள்ளன. இவை நீர்க்காகம் போன்று
நீரில் மூழ்கி மீன்களை வேட்டையாடுகின்றன. இவை நீருக்கடியில் ஒரு மீனைப் பிடித்த பிறகு,
மேற்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து, காற்றில் வீசியெறிந்து விழுங்குகின்றன. நீருக்குள்
தன் உடலை வைத்துக்கொண்டு, நீருக்கு வெளியே கழுத்தை மட்டும், பாம்பு போல நீட்டிக் கொண்டு,
நீந்துவதால் இவை பாம்புத்தாரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நீர்க்காகங்களைப் போலவே,
இவை ஈரமான இறகுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் ஒரு பாறை அல்லது கிளையில் அமர்ந்து
இறக்கைகளை விரித்து உலரச்செய்யும்.
அந்த இயற்கை
எழில் மிகுந்த சூழலில் பறவைகள் பார்த்தது மறக்க முடியாத தருணம். புதிய நபர்களுடன் புதிய
அனுபவம்.


வெள்ளோடு
பறவைகள் சரணாலயம் (Vellode Bird Sanctuary) எனக்கு இதுவே முதல் முறை.
இந்திய
பறவையியலின் தந்தை சலீம் அலி எழுதிய “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” எனும் புத்தகத்தை
அறிமுகம் செய்தார். பறவைகளை பார்த்த பிறகு பறவைகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் கூடியது.
பவணந்தி முனிவர் வாழ்ந்த இடம்
அடுத்ததாக
காலை உணவு உண்டபின் பேருந்து பவணந்தி முனிவர் வாழ்ந்த இடம் நோக்கி சென்றது. சீனாபுரத்தில்
அமைந்துள்ளது. அங்கு சென்றவுடன் தொல்லியல் ஆசிரியர் கொங்கு சதாசிவம் அவர்கள் பவணந்தி
முனிவரைப் பற்றி எடுத்துரைத்தார்.


பவணந்தி
முனிவர் நன்னூலை இயற்றியவர். நன்னூல் பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால்
இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்..
குமரிக்கல்பாளையம்
அடுத்ததாக
குமரிக்கல்பாளையம் என்ற இடத்திற்கு சென்றோம். மதிய வேளையில் சில கி.மீ. உள்ளே நடந்து
சென்றோம். அங்கே மிகப்பெரிய நடுகல் ஒன்றைக் கண்டோம். நான் அதைப் பார்த்து மிகுந்த ஆச்சரியம்
அடைந்தேன். அவ்வளவு உயரமான நடுகல். ஆசிரியர் கொங்கு சதாசிவம் அவர்கள் அந்நடுகல்லைப்
பற்றி எடுத்துரைத்தார்.
இறந்தவர்களின்
நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை “வீரக்கற்கள்” என்றும் கூறுவர். நினைவுக்
கற்கள் எடுக்கும் வழக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது
தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும்
பெருங்கற்காலம் முதற்கொண்டு இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு,
தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாக நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே
நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர் உடைய நடுகற்களுக்கு பெருமதிப்பு
கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கி
வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி
குமரிக்கல்பாளையத்தில்
அகழ்வாராய்ச்சி (Excavation) நடந்த இடங்களை சுற்றிப்பார்த்தோம். நான் முதன்முதலாக அகழ்வாராய்ச்சி
நேரில் காண்கிறேன். புதிய அனுபவமாக இருந்தது. சதுர வடிவமாக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன.
அதில் மண்ணின் அடுக்குகள் தெளிவாக தெரிந்தன. அதில் பானைகள், பானை ஓடுகள், எலும்புகள்
தெளிவாக தெரிந்தன. ஒரே நிலத்தில் பல அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம்
பார்த்த பிறகு தொல்லியல் துறை மீதான ஆர்வம் கூடியது.
விஜயமங்கலம் சமணர் கோவில்
அடுத்ததாக
விஜயமங்கலம் சமணர் கோவிலுக்கு சென்றோம். ஸ்ரீ 1008 பகவான் சந்திரபிரபா சுவாமி திகம்பர்
ஜெயின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் உள்ளே சென்று பார்த்தோம். கல்வெட்டு
இருந்தது. ஆசிரியர் கொங்கு சதாசிவம் அவர்கள் அக்கல்வெட்டை வாசிக்க கற்றுக்கொடுத்தார்.
அதன் உள்ளே கிருத்தி எனும் பணிப்பெண்ணின் சிலையும் இருந்தது. முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர்
இருந்தார். அவரின் தலைமேல் முக்குடை இருந்தது (வாகனம் பசு). உள்ளே 8 ஆம் தீர்த்தங்கரர்
சந்திரபிரபா சிலை இருந்தது.
இக்கோவிலின் வரலாறு
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடு 24 நாடுகளாக பிரிக்கப்பட்டு
இருந்தன. இவ்வூர் குரும்பநாடு என்ற நாட்டில் இடம்பெற்றிருந்தது. கல்வெட்டுகளில் இந்நாடு
குறுப்பு நாடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி சமணர்களின் தொன்மைமிக்க வாழ்விடமாகக்
கருதப்படுகிறது.
கொங்கு
வேளிர், விஜயமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவர்கள்
சமண சமயத்தைச் சேர்ந்தவராவர். கொங்கு வேளிர் ஒரு தமிழ் சங்கத்தையும் நிறுவியுள்ளனர்.
விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாகவும் திகழ்ந்துள்ளது. இதனுடன் தொடர்புடைய
இடம் சங்குவடம் என்றும் சங்கு இடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தமிழ் சங்கம்
தொடுத்த வினாவிற்கு தகுந்த விடையளித்த கிருத்தி எனும் கொங்கு வேளிர் அரசரின் பணிப்பெண்ணை
கொங்கு மண்டல சதகங்கள் என்னும் நூல் போற்றுகிறது. இது காரணமாக விஜயமங்கலத்தை மங்கை
மாநகரம் என்றும் தமிழ் மங்கை என்றும் போற்றியுள்ளனர். இந்தக் கோவில் கி.பி. 6-ம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட சமணக்கோவில். பின்னாளில் சாமுண்டராயன் என்பவரும், சோழ மன்னர்களும் கோவில்
பணிகள் செய்துள்ளனர்.
கோவில் அமைப்பு
இக்கோவில்
மேலைக்கங்கர் கலைப்பாணியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் என்ற
அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானம் சுண்ணாம்பு மற்றும் சுதையால் ஆனது. கோவிலைச்
சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கோவில் இராஜ கோபுரம் மூன்று நிலைகளைக்
கொண்டது. கோவிலின் முன்பு ஒரே கல்லால் ஆன மானஸ்தம்பம் (Manastambha) நிறுவப்பட்டுள்ளது.
சமண சமயத்தின்
எட்டாவது தீர்த்தங்கரர் ஆன சந்திரபிரபா இவ்வாலயத்தின் மூலவர் ஆவார். மூலவர் சிலை திருடப்பட்டதால்
இவருக்கான படம் மட்டும் காணப்படுகிறது. இங்குள்ள அர்த்தமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள
சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சிலை சிதைந்து காணப்படுகிறது. இக்கோவில்
முன்மண்டபத்தில் மேலே குறிப்பிட்ட தமிழ் சங்கத்தில் இடம்பெற்றிருந்த ஐந்து தமிழ் புலவர்களின்
சிலைகளும், தமிழ் சங்கம் எழுப்பிய வினாவிற்கு விடையளித்துப் புகழ்பெற்ற கிருத்தியை
எனும் பணிப்பெண்ணின் சிலையும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள உள்மண்டபத்தில் ரிஷபநாதர்
என்னும் ரிஷபதேவரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி இக்கோவிலில் இடம் பெற்றுள்ள அரிய சிற்பங்கள் தொன்மையானவை மற்றும் தனித்துவம்
மிக்கவை. சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் சந்திரகுப்த
மௌரியர் அவரது குரு பத்திரபாகுவுடன் தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண
மதத்தை போதித்தார்.
கல்வெட்டுகள் பற்றி
இக்கோவில்
முன் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, சரவணபெளகுளாவில் இடம் பெற்றுள்ள கோமதீசுவரர்
சிலையை நிறுவிய சாமுண்ட ராயனின் தங்கையான புல்லப்பை என்பவள், இக்கோவிலில் வடக்கிருந்து
(சல்லேகனா) நோன்பு நோற்று உயிர்துறந்த செய்தியினைப் பதிவு செய்துள்ளது.
பெருங்கதையின்
அழகை விளக்கும் மற்றொரு கல்வெட்டு கோவிலுக்குள் இடம்பெற்றுள்ளது. சமணர்கள் மூலம் தமிழுக்கு
பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன.
அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் பெருங்கதை. இயற்றியவர் கொங்கு வேளிர். இவர் வடநாட்டு
மொழியான பைசாச மொழியில் உதயணன் வரலாற்றைக் கூறும் ஸ்ரீபிருகத்கதா எனும் காப்பியத்தை,
தமிழில் பெருங்கதை என்ற பெயரில் நூலாக எழுதினார்.
கொடுமணல்
மதிய உணவு
இடைவேளைக்குப் பிறகு, கொடுமணலுக்கு சென்றோம். கொடுமணலுக்கு செல்ல மிகவும் ஆர்வமாக இருந்தது.
கொடுமணலுக்கு சென்ற பின் அங்கே கல்பதுக்கை மற்றும் நடுகல் இருந்தது.
இந்த கல்பதுக்கை
பற்றி, இறந்தவர்களை வைத்த ஈமத்தாழியைப் பாறைக் கற்களைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும்
வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட முறை ஆகியவற்றைக் கொண்டு
இவை கல்படை, கற்கிடை, கல்குவை, கல்வட்டம், கல்திட்டை என்று பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன.
இறந்தோர்
உடலைப் பதுக்கி மறைத்துப் புதைத்து வைத்ததால் இவை பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் குறிப்பிடப்படுகின்றன.
கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை என்றும் குறிப்பிடலாயினர்.
பதுக்கைகள்
பெருகிய பின்னர் அல்லது புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளம்
காண்பதற்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவித்தனர். அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான
கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். கல்திட்டை என்பது இறந்தவர்களின் ஈமக்குழியை
ஒட்டிய நான்கு பக்கங்களில் பெரும் கற்பாறைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு, அவற்றின்
மேல்புறத்தில் ஒரு பெரிய பெருங்கற் பலகையால் மூடப்பட்டதாகும். கல்பதுக்கைகள் எனப்படுபவை
கல்திட்டைகளில் நிலத்திற்கு மேல் காணப்படும் நான்கு பெருங்கற்களும் ஈமக்குழியை ஒட்டியவாறு
நிலத்திற்குள் பதிக்கப்பட்டு, அதன் மேலே மூடிபோன்ற ஒரு பெருங்கற் பலகையால் மூடப்பட்டிருக்கும்.
பெருங்கற்களைக்
கொண்டு அறை போன்ற அமைப்புகளை உள்ளடக்கியதால் இவை நாளடைவில் கல்லறைகள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு இறந்தவர்களுக்காகக் கல்லறைகள் எழுப்பப்படும் வழக்கமே இன்றுவரை தொடர்கிறது.
சிறிது
தூரம் நடந்து சென்ற பின் ஆசிரியர் கொடுமணலின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
கொடுமணல் பற்றி
கி.மு.
500 க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வூர்
இரும்புக்காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக்காலம் (Early Historic
period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதி
ஆகும். கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றி பதிற்றுப்பத்து என்னும்
சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கொடுமணல் வணிகத்திலும், தொழிற்துறையிலும் சிறப்புற்று
இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
கொடுமணலில்
நடந்த அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும் குருமாணிக்கம்,
நீலமணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல், சந்தனம்
மகிழ் போன்ற நகைக்கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று
பகர்கின்றன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து,
உரோம் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிற சான்றுகள்
கொடுமணலில்
நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை,
சிப்பி, கிளிஞ்சல், அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள்
போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இரும்பு உருக்காலை இடத்தைப் பார்த்தோம்.
பல்வேறு விதமான பானை ஓடுகள், படிகக்கற்கள், இரும்பு கசடுகளும் அதிகம் இருந்தன.
தமிழி எழுத்துக்களின் முன்னோடி எது?
பல குயவர்கள்
ஒன்றிணைந்து தங்களது பானைகளை ஒரே சூளையில் இட்டுள்ளனர். அப்போது தங்கள் மட்கலங்களைத்
தனித்து அடையாளம் காண்பதற்குக் குறியீடுகள் இட்டுக் கொண்டனர். அதை ‘குயவர் குறியீடு’
எனக் குறிப்பர். அதே போன்று மட்கலங்களை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், அவை தங்களுக்குரியதாக
அடையாளப்படுத்திடவும் குறியிடுவது வழக்கமாக இருந்துள்ளது. இவற்றை ‘உடைமைக்குறி’ எனக்
கூறலாம். இதை ஒரு கூட்டத்தாரின் அல்லது குலத்தவரின் குறியீடு எனவும் கூறலாம். இவையே
தமிழி எழுத்துக்களின் முன்னோடியாக அமைந்துள்ளது.
சர்க்கார் பெரியபாளையம் கோவில்
அனைத்தையும்
பார்த்துவிட்டு இறுதியாக சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோவிலுக்குச் சென்றோம்.
அந்த மாலைப்பொழுதில் கோவில் மிகவும் அழகாகக் காட்சி அளித்தது. கோவிலைச் சுற்றியுள்ள
கல்வெட்டுகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துரைத்தார். கல்வெட்டுகளைப் பார்த்து வாசிக்க முயல்வது
எனக்கு இதுவே முதல் முறை. கோவிலுக்குள் முருகன், கொற்றவை என சில சிலைகள் இருந்தன.
இக்கோவிலின் வரலாறு மற்றும் கல்வெட்டு பற்றி
மூலவர்
லிங்கம் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. சுந்தரரின் தேவாரப் பாடலில்
இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், அசல் கோயில் கி.பி. 7 முதல் 8 ஆம் நூற்றாண்டுக்கு
முன்பே இருந்திருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டு கி.பி. 1200
ஐச் சேர்ந்தது. கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்குச்
சொந்தமானது. 9 கொங்கு பாண்டியர்களுக்குச் சொந்தமானது. ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர்
வீரநஞ்சராயருக்குச் சொந்தமானது.
இந்த சுக்ரீசுவரர்
கோயிலின் வைகாசி விழாவிற்கான செலவுகளைச் சமாளிக்க, 64 வணிகக் குழுக்கள் (மற்றும் சில
பழமையான தமிழ் எழுத்துக்களில் ஒன்றான வட்டெழுத்தில் கையெழுத்திட்டன) இந்தக் கிராமத்தின்
வழியாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் தானியங்கள், பருத்தி துணிகள், மரம் (சந்தனம்),
யானை, ஆடு, குதிரை போன்ற பொருள்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக்
கொங்கு சோழ சுந்தர பாண்டியனின் கல்வெட்டு 24 வரிகளைக் கொண்ட மிகப்பெரிய மற்றும் மிக
முக்கியமான ஒன்றாகும். மேலும் ஒவ்வொரு வரியும் 130 முதல் 140 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
வணிகக் குழுக்கள் பண்டைய தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை.
இதிலிருந்து சர்க்கார் பெரியபாளையம் என்ற இடம் கொங்கு நாடு வழியாகச் செல்லும் 20 வர்த்தகப்
பாதைகளில் ஒன்றில் இருந்தது என்று நாம் முடிவு செய்யலாம்.
இறுதியாக
மூலவர் லிங்கத்தை தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
பயணத்தின் நிறைவு
திருப்பூர்
அறக்கல்வி மாணவர்களை அவர்களின் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்ட பின் ஈரோடு அறக்கல்வி
மாணவர்கள் ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டோம். அந்த பயணத்தில் முன்னாள் அறக்கல்வி
மாணவர்களோடு கலந்துரையாடினோம். முனை அமைப்பைப் பற்றி கேட்டறிந்து கொண்டோம். ஈரோடு பேருந்து
நிலையம் வந்து இறங்கினோம். அவரவர் வீட்டிற்குப் பாதுகாப்பாகச் சென்றோம். இத்துடன்,
ஒருநாள் தொல்லியல் பயணம் நிறைவடைந்தது. காலை முதல் இரவு வரை பல புது புது கற்றல்கள்,
அனுபவங்கள், தேடல்கள், நண்பர்கள், பயணங்கள் என அந்நாள் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த
சிறப்பான பயணத்தை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்
Comments
Post a Comment