கர்நாடக கலைப் பயணம் – சுஜிதா

 

கர்நாடக கலைப் பயணம் – சுஜிதா

2026 ஆகஸ்ட் 20 முதல் 22  வரை கர்நாடகத்தின் வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும் ஹொய்சாலர் கலைக்கட்டிடங்களை காணும் நோக்கில், நாங்கள் ஏழு பேர் எங்கள் பயணத்தை தொடங்கினோம். 10.30 மணிக்கு இரவு ஈரோட்டிலிருந்து மைசூர் செல்லும் பேருந்தில் எங்கள் பயணம் ஆரம்பித்தது. போகின்ற வழியில் இருள் சூழ்ந்தது. நகரத்தின் வெளிச்சம் நீங்கி, மலைமேல் ஏறும் போது இரவுக்கே உரித்தான இருள் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்றது. வழியில் பாறைகளை  பார்த்தோம். பின்பு காலை 5:00 மணிபோல் மைசூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.பின்பு அங்குள்ள ஒரு கட்டணக் கழிப்பிடத்தில் உடலை சுத்திப்படுத்திக் கொண்டு எங்கள் திட்டத்தின் முதல் இடமான லஷ்மிநாராயணர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.   



மைசூரிலிருந்து  சென்று கொண்டிருக்கும் பொழுது   ஜன்னலோரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வழியில், அசோகா சாலையில் உள்ள புனித் பிலோமினா தேவாலயத்தின் கட்டிட தோற்றம் எங்கள் கண்களை கவர்ந்தது. நாங்கள் அதன் அழகைக் காண எங்கள் டெம்போவை நிறுத்திவிட்டு ஆலயத்தைப் பார்த்துச் சென்றோம்.ஜெர்மனியின் கோல்ன் தேவாலயம் மற்றும் நியூயார்க் நகரின் St. Patrick's Cathedral ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு நியோ - கோதிக் பாணியில் டேலி என்ற பிரெஞ்சக்காரரால் கட்டப்பட்டது. நியோ - கோதிக் பாணியில் சுவர்கள், ஜன்னல்கள், தூண்கள் அனைத்தும் நேராக மேலே செல்லும் செங்குத்துக் கோடுகளால் நிரம்பியிருக்கும். இதனால் கட்டிடம் உயரமாகவும், உறுதியாகவும் தோன்றும். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் கண்ணாடி துண்டுகள் கிறிஸ்துவின் வாழ்க்கை, பைபிள் கதைகள், தெய்வீக காட்சிகள் போன்றவை சிறப்பாக அமைந்திருந்தது. நாங்கள் சிறிது நேரம் அங்கு செலவழித்து அங்கிருந்து புறப்பட்டோம்.



காலை உணவிற்க்குப் பின்பு நாங்கள் ஹொசஹலலு வில் உள்ள லஷ்மிநாராயணர் கோயிலை  வந்தடைந்தோம். இது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாளர் கலைப்பாணியின் சிறந்த எடுத்துக்காட்டு, இது வீர சோமேஸ்வரர் காலத்தில் கடப்பட்டது. இங்கு சிற்பங்கள் மென்மையான சோப்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இது  மூன்று கருவறைகள் கொண்டது. நடுவில் லஷ்மி நாராயணர், மற்ற கருவறைவிளில் விஷ்ணுவின் வடிவங்களான வேணுகோபாலர் மற்றும் லஷ்மிநரசிம்மர் அமைந்துள்ளனர். கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம், விஷ்ணுவின்  பல்வேறு வடிவங்கள், யானைகள், குதிரைகள், ஹம்சங்கள், மகரங்கள், யாழிகள் போன்றன பல அடுக்குகளாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

அங்கு ஆறு அடுக்குச் சிற்ப அடித்தளம் ஒன்றைப் பார்த்தோம். அதில் கீழிருந்து முதல் அடுக்கு - வலிமையைக் குறிக்கும் யானைகளின் அணிவகுப்பு. இரண்டாம் அடுக்கு - வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் குதிரைகள், மூன்றாம் அடுக்கு - நுணுக்கமான கொடி மற்றும் இலை வடிவமைப்பு வேலைபாடுகள், நான்காம் அடுக்கு - ராமாயணம், மகாபாரதம், பாகவத் புராணம் ஆசிய காவியக் கதைகள் விவரிக்கும் சிற்பத் தொடர்கள். ஐந்தாம் அடுக்கு - கோவிலைக் காக்கும் தொன்மவியல் நீர் விலங்கான மகரங்கள். ஆறாம் அடுக்கு - தூய்மையைக் குறிக்கும் அன்னப்பறவைகள்.

இது மூன்று கருவறைகள் கொண்டது. அதில் நடுவில் உள்ள நாராயணருக்கு மட்டும் விமானம் உண்டு. மற்ற இருவருக்கும் விமானம் இல்லை. முழுக் கோயிலும் தரையிலிருந்து சற்று உயர்த்தப்பட்ட, நட்சத்திர வடிவ மேடை (ஜகதி) மீது கட்டப்பட்டுள்ளது. ஆறு அடுக்கு அடித்தளத்திற்கு மேலே, பிரம்மாண்டமான தெய்வச் சிலைகள் சுவர்களை அலங்கரித்தன.  அதில் கிருஷ்ணரின் பிருந்தாவனத்தை குறிக்கும் ஆநிரைகளும், கோப்பியர்களும், கோவர்த்தன மலையில் உள்ள மரங்களுக்கு நடுவில் புல்லாங்குழலை ஏந்திக்கொண்டு அழகான ஆபரணங்களை அனிந்து நுணுக்கமான வேலைப்பாடுகளால் தென்பட்டது.


பொதுவாக கோவிலின் வெளிப்புறத்தில் விஷ்ணுவின் பல வடிவங்கள் இருந்தன. சங்கு, சக்கரம், தாமரை, கதை போன்றவற்றை வைத்து விஷ்ணுவை அடையாளம் கண்டுக்கொண்டோம். இங்கு உள்ள ஒவ்வொரு சிற்பமும் சோப்புக்கல்லால் செதுக்கப்பட்டது. எனவே அதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் சிற்பத்தின் நகைகள், ஆடைகளின் மடிப்புகள், முடிஅலங்காரம், மலர் வடிவங்கள், விலங்குகளின் உடல் அலங்காரங்கள் என தனித்தனியே காண வியப்பபளித்தன. கோவிலின் உள்ளே இருக்கும் தூண்கள், மெருகூட்டப்பட்டதாகவும், வட்டமான வடிவங்கள் கொண்டதாகவும் காட்சியளித்தது. நான்கு முக்கிய தூண்கள் மிகவும் சிறந்த அழகிய வேலைபாடுகளுடன் இருந்தது.

பின்பு நாங்கள் மதிய உணவு சாப்பிட்டு சரவண பெலகோலாவிற்க்குச்  சென்றோம். இங்கு செல்வதற்க்கு முன்பு நாங்கள் சமணத்தின் அடிப்படை தத்துவமான  அகிம்சை, அனேகாந்தவாதம் (பல தெய்வ வழிபாடு), மற்றும் அபரிகிரகா (பொருள் பற்றின்மை) பற்றியும், சமண சமயத்தின்படி தீர்த்தங்கரர் என்பவர் ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை அருகன் என்பர். அருகன் என்றால் கருத்துகளால் நம் அருகில் இருப்பவன். ஞான நிலையை அடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக  விளங்குவர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு- இறப்புச் சூழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகின்றனர். 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர் அதில் முதல் தீர்த்தங்கரரான ரிஷபத்தேவருக்கு நூறு புதல்வர்கள் அதில் முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி (எ) கோமதீஸ்சுவரர் ஆவார். பரதனுக்கும், பாகுபலிக்கும் சண்டை நடத்தி யாருக்கு மகுடம் சூடலாம் என்று ஒரு போட்டி வைத்தனர். இதில் பாகுபலி வென்றுவிட்டு ஆட்சியை அடைந்தார். தனது தமையன் பரதன் தோல்வியில் வாடியதால் அரசனாக இருந்தும் துறவறம் மேற்கொண்டு சந்திரகிரி மலையில்  ஞானம் அடைந்தார் என்று பாகுபலியின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்துக் கொண்டுப் போனோம்.

அங்கு ஒற்றைக் கல்லால் ஆன 57 அடி உயர பாகுபலியைக் காண சரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்சுவரர் கோயிலுக்குச் சென்றோம். இது விந்தியகிரி மலையில் உண்டு. மேலைக் கங்க மன்னரின் படைத்தலைவருமான, அமைச்சருமான சந்திரராயன் என்பவரால் இச்சிலை நிறுவப்பட்டது. கோமதீஸ்சுவரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா அபிசேகம் நடைபெறும்.                     


இது ஒரு மோனோலித்திக் சிலை ஆகும். கைகள், கால்கள் இயல்பாக இருந்தன. உடலில் ஆடைகளோ, ஆபரணங்களோ இல்லை, இது முழுமையான துறவறத்தை குறித்தது. இதிலிருந்து அவர் உலக ஆசையை துறந்தவர் எனத் தெரிந்தது. அவர் முகத்தில் ஒரு அமைதியைப் பார்க்க முடிந்தது. அவர் கைகளிலும், கால்களிலும் செடி கொடிகள் சுற்றியிருத்தது. இதிலிருந்து அவர் பல ஆண்டுகள் அசையாமல் தியானத்தில் இருந்திருக்கிறார் என்று புரிந்தது. அவர் காலின்  அடியில் எறும்புக் குன்றுகளும் பார்த்தோம். இது அவருக்கும் இயற்கைக்கும் உள்ள ஏதோ ஒரு தொடர்பை சுட்டிக்காட்டுவதுபோல் இருந்தது. ஹொய்சளர் கால கோயில்கள் அலங்காரமிக்கவை, ஆனால் இந்தச் சிலை அழகிய எளிமையின் உச்சம் என்றே கூறலாம்.

 பின்பு நாங்கள் மாலை கிக்கேரி கோவிலுக்கு சென்றோம். எங்கள் டெம்போவை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இரண்டு வீதிகள் போல சந்தினுள் நடந்து சென்று பிரம்மேஸ்சுவரர் கோயிலை அடைந்தோம். இந்த  கிக்கேரி கோவிலானது ஹொய்சாளர் கட்டிடக்கலை பாணியில், முதலாம் வீர நரசிம்மன் என்ற ஹொய்சாள மன்னரின் ஆட்சியின் போது, மொம்மரே நாயகிட்டி என்ற செல்வந்தப் பெண்ணால் கட்டப்பட்டது என்றும் மேலும் கிக்கேரி கோவிலின் அருகே ஒரு ஏரிக்கரை இருப்பதாகவும், மேலும் அந்த ஏரிக் கரைக்குக் கீழ் மல்லேசுவரர் கோயில் அமைந்துள்ளது எனவும் வலைதளங்களில் படித்து விட்டுச் சென்றோம்.

அந்த ஏரிக்கரையின் கீழ் உள்ள மல்லேசுவரர் கோயில் நீரால் மூழ்கியதால்  அதில் இருந்த மூலவர் விக்கிரகம் சிவலிங்கம் இந்த புதிய கோயிலினுள் மாற்றப்பட்டது. மேலும் ஒரு தூண்போன்ற ஒரு கல் அந்த ஏரிக்கரையின் நீரோட்டத்தில் இருந்து எட்டிப்பார்த்தது. அந்த கோயிலைச் சுற்றி இயற்கை மரங்கள், செடிகள் என்ற இயற்கையும் அந்த கோவிலின் ஒரு சிற்பி போல காட்சியளித்தது.

புகைப்படத்தில் இந்தச் சிற்பத்தின் இடதுபுறம் உள்ள சிலையில் உள்ள பெண் தன் கையிலுள்ள கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். அழகிய ஆபரணங்களுடன் பணிப்பெண்ணின் துணைக் கொண்டு எழிலுடன் நிற்கிறாள்.வலதுபுறம் உள்ள சிற்பம், உடலில் வளைவு கொண்டு நிற்கின்றது. தலைக்கு மேல் உள்ள மரக்கிளையைப் பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இது கோயிலின் வெளியில் காணப்பட்டது. இதனை மதனிகா சிற்பம் என்பர். இதில் ஒவ்வொரு தூணிலும் பல தெய்வங்கள், செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிற்பங்களும் அதன் அழகையும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் பார்ப்பவர்களின் கண்களுக்கு கலையாகவும், கவியாகவும் பதியும்படி வெளிப்படுத்துகின்றன.

 



இப்படி ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்து, வியந்து, எவ்வாறு இதை இவ்வளவு கச்சிதமாக செதுக்கிருப்பார்கள்? என்ற வியப்புடன்  முதல் நாள் பயணம் ஹொய்சளர்் கட்டிடகலையின் மீது ஆர்வம் கொள்ள நினைத்துக்கொண்டே முடிந்தது.

இரண்டாம் நாள் காலை அழகான தென்னை மரங்கள் சூழ்ந்த வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். சுமார் ஒரு 8.45 மணியளவில் காலை உணவும் காபியும் குடித்துவிட்டு ஹலபீடுக்கு சென்றோம். அங்கு செல்வதற்கு முன்பு அதன் வரலாற்றை தெரிந்து கொண்டு சென்றேன். அதில் இந்த கோவில் 12-ஆம் ஹோய்ச்சள பேரரசின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. மேலும் இதன் வரிசையில் படித்து வரும்போது இக்கோயிலில் மஹாபாரதம் மற்றும் இராமாயனத்தை ஒட்டிய அடுக்கடுக்கான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் எனும் தகவலை அறிந்தோம்.

கோயிலின்  நுழைவாயிலில் இடதுபுறம் ஒற்றைக்கல் பெரிய விநாயகர் சிலை. அதற்கு எதிரில் ஹோய்சாள பேரரசின் சின்னமான ஒரு வீரன் புலியை அடக்கும் காட்சி போன்ற சிற்பமும் அமைந்திருந்தது. காவியங்களின் கதாபாத்தின்  தேடலைத் தொடங்கினோம். அதில் அர்ஜூனன் மற்றும் கர்ணன் ஆகியோரை தேடுவதிலேயே அதிக ஆர்வம் நினைத்துபோல சிறிது நேரம் கழித்து சங்கு போர் கொடி கொண்ட கர்ணனும் ஹனுமன் சின்னம் கொண்ட அர்ஜூனனும் நேருக்கு நேர் போர் செய்து கொல்லும் சிற்பம் எங்கள்  கண்களை விட்டு அகலவில்லை.

மேலும் இராமயணத்தில் வாலியை இராமன் மரத்திற்கு பின் நின்று தாக்கும் சிலையைப் பார்த்தோம். பின்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடையும் காட்சியையும் பார்த்தோம். ஹலபீடுவின் பிரம்மாண்டத்தை பார்க்க கண்கள் போதவில்லை. அதன் முழு அழகையும் காண நேரமும் எங்கள் மூளையில் இடமும் போதவில்லை. அங்கு அந்த பிரம்மாண்ட கலை எங்களை வாய்பிளந்து அங்கேயே நிற்க வைத்து நிறைய நேரம் செலவிட வைத்து விட்டது. எனவே நாங்கள் நேரமின்மை கருதி அடுத்து செல்லவிருந்த பெலவாடி ரத்து செய்யப்பட்டது.

 பின்பு மதிய வேலை பெலூரிலுள்ள சன்னகேசவா கோவிலுக்குச் சென்றோம். இது ஹொய்சளர்களின் கலையின் சிறந்த எடுத்துக்காட்டு, அங்குள்ள மதனிகா சிற்பங்கள் மிகவும் அழகாகவும், நுணுக்கமாகவும், உயிரோட்டமாகவும் இருந்தது. ஹொய்சள கலைகளுக்கு உள்ள சிறப்பே நம்மை தங்களது வேலைபாடுகளால் வாய் பிளக்க வைப்பது தான். அது இங்கும் எங்களால் உணர முடிந்தது. ஒவ்வொரு வேலைப்பாடுகளும், சுவர்களும், தூண்களும் அவ்வளவு அழகு. கோயிலின் உள்ளும் வெளியும் சிறந்த சிற்பங்கள் எங்களை மேலும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

 நாங்கள் சென்ற போது வானநிலை மிகவும் மென்மையான காற்றுடனும், வென்மையான மேகங்களுடனும் எங்களை அன்புடன் வரவேர்த்தன. அதே மகிழ்ச்சியுடன் கோயிலினுள் பெருமாளை தரிசித்ததை விட அதன் நுழைவாயிலின் மேலும், பக்கங்களிலும் உள்ள சிற்பங்களைப் பார்க்கவே எங்கள் கண்கள் துள்ளிக் கொண்டிருந்தன. கோயிலின் கட்டிடக்கலையை பார்த்துக் கொண்டே நடந்த ஒவ்வொரு நிமிடமும் புது புது அனுபவம் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களில் இவ்வளவு நுணுக்கமா? என்ற ஆச்சரியம் ஒவ்வொரு கோயிலுக்குச் செல்லும் போதும், ஒவ்வொரு சிற்பத்தை பார்த்த போதும் தோன்றின.கோயிலினுள் மேல் கூரையில் இருந்த வேலைப்பாடுகள்: ஒரு பெண் கையில் கிளியும் பக்கத்தில் மயிலும் இருந்தது. அது அந்த பெண் கிளியைப் போன்ற குரலும் மயிலைப் போன்ற எழிலையும் உடையவள் என்று கூறும் அளவிற்கு இருந்தது. கோயிலின் சிறப்பை கூற மழை வழிகாட்டியாக வந்துவிட்டது, நாங்களும் அமைதியாக அதன் வழிகாட்டுதலை கவனித்தும் அதன் அழகை ரசித்துக் கொண்டும் இருந்தோம். மழையின் வருகையோடும் இருளின் வருகையோடும் கோயிலின் கோபுரங்கள் வர்ணிக்க முடியாத ஒரு அழகுடன் இருந்தது. அங்கிருந்து திரும்ப மனமில்லாமல் மழைக்கு வழியனுப்பிவிட்டு கோயிலை விட்டு  புறப்பட்டோம். அந்த கோயிலின் அமைதியான அனுபவத்தை யோசித்துக்கொண்டே சக்லேஷ்புரை நோக்கி சென்றோம்.

புகைப்படங்களில் பார்த்ததை விட நேரில் பார்க்கும் போது ஒவ்வொரு கோயில்களும், சிற்பங்களும் சுற்றியுள்ள இயற்கை சூழல்களும் எங்கள் மனதில் ஆழமான மிகவும் அழகான நினைவுகள் என்ற அனுபவம் கிடைத்துள்ளது. இந்த கலையை பார்க்க கண்கள் போதவில்லை. இந்த பயணம் ஒரு புது ஆச்சரியத்தையும் அனுபவத்தையும் அளித்தது.

எங்கள் மூன்றாம் நாள் சக்லேஷ்புராவிலிருக்கும் மஞ்சராபாத் கோட்டையை நோக்கி பயணம் செய்யத் தொடங்கினோம். அங்கு சிறு தூறல்களுடன் படிகளில் ஏறி கோட்டைக்குச் சென்றோம். கோட்டையை சுற்றிப் பார்த்ததுடன், அங்கிருந்து தெரிந்த அழகான இயற்கைக் காட்சிகளையும் ரசித்தோம். இது திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோட்டையின் நட்சத்திர வடிவ அமைப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது.

அதன் பிறகு, நாங்கள் ஹெத்தூர் கிரீன் மெடோவிற்கு சென்றோம். அந்த இடம் மிகவும் அழகாகவும் பசுமையாகவும் இருந்தது. அந்த இயற்கையான சூழலும் குளிர்ந்த காற்றும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு நாங்கள் நிறைய அட்டைப் பூச்சிகளைப் பார்த்தோம். அட்டையை நேரில் பார்த்தது இதுவே சிலருக்கு முதல் முறையாகும். திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்த இயற்கையை நேரில் பார்க்கின்ற பொழுது அதன் முழுமையான அழகை அனுபவித்த ஒரு திருப்தி எங்கள் அனைவரின் மனதிலும் இருந்தது.

 


பின்பு அப்பீஸ் நீர்வீழ்ச்சிக்குச் (Abby's Falls) சென்றோம். நீரின் சத்தமும் அதன் அழகும் சொல்ல வார்த்தையில்லை. நாங்கள் நீர்வீழ்ச்சியை அடையும் முன்பே அது அதன் சத்தத்தால் எங்களை பாட்டு பாடி வரவேற்றது போல் இருந்தது. அங்குள்ள நீரின் வேகம் என் மனதில்  உள்ள நிறைய எண்ணங்களுக்கு உற்சாகம் அளித்தது. மகிழ்ச்சியும் நிறைவும் கொண்ட நாளை கழித்து ஊர் திரும்ப மைசூர் வந்தடைந்தோம்.

 மேலே உள்ளது உடன் பயணித்த நண்பர்களின் உதவியுடன் எழுதியது  

 


Comments

Popular posts from this blog

Career with Ethics

அறிமுகம்

மாணவர் களப்பணிகள்