பாம்பும் பிடாரனும் வாசிப்பு - ஸ்ரீவித்யா

 

பாம்பு மற்றும் பிடாரனின் உறவு

 

பாம்புகளை எனக்கு பிடிக்கும் அவைகளை நினைக்கும் போது எனக்கு பயமில்லை எனினும் பாம்பைக் கண்டுவிட்டால் சில நொடிகள் நெஞ்சு படபடக்கும். ஏன் இந்த பதற்றம்? இது பிறந்ததிலிருந்து இயல்பானதா? அல்லது பிறர் கூறும் கதைகளாலா?

பாம்பைக் கண்டாலே அடிக்க வேண்டும் என்பது யார் எழுதி வைத்த சாசனம்? தண்ணீர் பாம்பு வந்தாலும் அடிக்கிறார்கள், சாரைப் பாம்பையும் அடிக்கிறார்கள். அவையெல்லாம் விஷமல்ல என்று அடிப்பவர்களுக்கும் தெரியும்.

வண்ண நிலவன் எழுதிய பாம்பும் பிடாரனும் சிறுகதையில் மனிதனுக்கும் பாம்புக்கும் உணர்வுகளை கடந்த ஒரு உறவு இருக்கிறது. ஐந்தறிவு பாம்புக்கும் ஆறறிவு மனிதனுக்கும் இடையிலான உறவு அது. அந்த உறவால் பாம்பும் பிடாரனும் ஒரே நிறத் தோலைப் பெற்றிருந்தார்கள்

இந்த உறவுக்கு தூண்டுகோல் மகுடியின் நாதம். இதுவே இவர்களை பழகவைத்தது. இந்தக் கதையில் உள்ள பிடாரனின் மாமன் சிறுவயதிலிருந்தே நாகங்களுடன் ஆழ்ந்த உறவு கொண்டிருந்தான், நாகங்களோடு தன்னை கலந்து கொண்டிருந்தான். வாசனையும் மண்ணின் சுவையும் வைத்தே பாம்புகளின் வசிப்பை கண்டறிவான். இத்தகைய நெருக்கம் எப்படி வந்தது?

இயற்கையை புரிந்து கொள்ளும் போது இவை நெருக்கமாகிறது. இந்தப் புரிதல் மற்ற உயிர்கள் மீது அருவருப்பும் பயமும் இல்லாத நிலையில் ஏற்படுகிறது.

இந்தப் புரிதலைப் பெற பல வருடங்கள் இயற்கையோடு தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

மாமன் பாம்புகளைப் பற்றி பிடாரனுக்கு சில குறிப்புகளை சொல்லித்தந்திருந்தான். இன்று இந்த பிடாரனும் பாம்பும் உறவின் உட்சநிலையை அடைந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எட்டு வருடம் பழக்கமானவர்கள். அப்படி இருவரும் என்ன உறவுக்குள் பீடித்திருந்தார்கள்? நட்பா? அடிமைத்தனமா? அன்பும் வெறுப்பும் கலந்த உறவு அது.

ஜனங்கள் ஆர்வத்தோடு இருவரின் உறவு பரிமாற்றங்களை கண்டுகளித்திருந்தினர். ஒரு கணம், இருவரின் உறவும் உட்சத்தை அடைந்தது! பாம்பு விரிந்த ஆகாயத்தையும் அதில் எரிந்த சூரியனையும் கண்டது.

மக்கள்திரள்- மகுடிநாதம், இதற்கிடையில் இந்த பாம்பு அதிர்ஷ்டசாலி பாம்பு தான்! கல் இடுக்குகள், மரப்பொந்துகள் என்று மற்ற பாம்புகளின் வாழ்க்கை மற்றும் பாம்பைக் கண்டாலே கொல்லும் குணமுடைய மனிதர்கள். இதனை ஒப்பிடும் போது இந்தப் பாம்பு அதிர்ஷ்டசாலி தான்!

 

பிடாரனுக்கும் மகுடி நாதத்திற்கும் பாம்புக்கும் இடையிலான உறவுதான் சமுதாயத்திற்கும் கல்விக்கும் எனக்கும் கல்வியால் எனக்கு கிடைத்த உரிமை தான் அந்த சூரியன்.

இந்தக் கதையில் பிடாரனும் சர்ப்பமும் ஆழ்ந்த மௌனத்தால் தங்கள் உறவை முடித்துக்கொண்டனர். ஆனால் சமுதாயத்திற்கும் எனக்குமான உறவு என் மௌனம் வரை தொடரும்

Comments

Popular posts from this blog

அறிமுகம்

ஏழாம் உலகம் - வாசிப்பு கட்டுரை, தீபிகா

வேடிக்கை பார்பவன் வாசிப்பு - ஸ்ரீவித்யா