வேடிக்கை பார்பவன் வாசிப்பு - ஸ்ரீவித்யா
நா.முத்துக்குமார் வேடிக்கை பார்த்த உலகம்
முன்னுரை
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி!
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… என்ற வரிகளின் மயக்கத்திலிருந்து
மீளாமல் கல்லூரி நூலகத்தில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த போது நா.முத்துக்குமார்
கண்ணில் பட்டார். வேடிக்கை பார்ப்பவன் என்ற தலைப்புதான் என்னை
ஈர்த்தது.
‘இந்த உலகம் ஒரு
நாடக மேடை அதில் அனைவரும்
நடிகர்கள்'- இதை யார் வேடிக்கை
பார்ப்பார்? ஒரு கவிஞன் வேடிக்கை
பார்த்த உலகத்தை காட்டுகிறது இந்தப் புத்தகம். முத்துக்குமார் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட வேடிக்கை பார்ப்பவன் தன் வரலாறு கூறும்
சிறுகதை வடிவில் உள்ள புதுமை நூல்!
நாம்
என்ன செய்தோம்? செய்கிறோம்? என்று வாழ்க்கையை திரும்பி பார்த்தால் புரியும் அதுவும் ஒரு வேடிக்கை என்று...
ஒப்புதல்
வாக்குமூலம்
"இவன் வானத்தில்
வெயிலும்
இருக்கிறது
மழையும்
இருக்கிறது
ஒன்று
குழைத்து
வானவில் வரையத் தெரியவில்லை" என்று வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை இணைத்து
வாழ தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாக முதல் கவிதை தொகுப்பில் பேசுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி
சிறு குறிப்பைச் சொல்கிறார். இவரது ஒப்புதல் வாக்குமூலம் கவிதையைப் படித்துவிட்டு எனக்கு நான் எழுதிய கிறுக்கல்கள்
இது,
இவள்
கையில்
பேனாவும்
இருக்கிறது
காகிதமும்
இருந்கிறது
இரண்டையும்
வைத்து
புதுமைகள்
படைக்கத் தெரியவில்லை...
வெந்து
தணிந்தது காடு
கவிஞர்களும் எழுத்தாளர்களும் தனக்குள் இருக்கும் போராட்டங்களையும் புரட்சிகளையும் ஒரு பேனா முனையை
வைத்து தணித்துக்கொள்கிறார்கள் போலும்.
அறியாத வயதில் தாயை இழந்த சோகத்தை
இரண்டு வரியில் உணர்ந்து எழுதியுள்ளார்.
"நெருப்பு என்றால் நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த
நீர் கண்ணீர்!
TNOOE-III
ஒரு கற்பனைக் கதாப்பாத்திரத்திற்கு
உயிர் வந்தது எப்படி? நாம் பேசும் வார்த்தைகள்
உயிர் கொள்ளும் தருணம் அது- புராணக் கதைகளை
கேட்டிருப்போம் ஆனால் அந்தக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு மதங்கள் உருவாயின,இல்லை இல்லை உருவாக்கப்பட்டன.
உயிர் உயிரினங்களுக்கு மட்டும் இல்லை எழுத்துகளுக்கும் வார்த்தைகளுக்கும் உண்டு என்பது தான் 'TNOOE-III’ என்ற சிறுகதையில் கூறுகிறார்.
நட்சத்திரங்களின்
தேசம்
ஒரு கோடை விடுமுறையில்
வீதியில் விளையாடிக் கொண்டிருந்தவன் கையில் பத்து புத்தகங்களை தந்து படிக்க சொன்னார் அவர் தந்தை. அவர்
அதன் பின்பே எழுத்தாளர் என்ற நட்சத்திரம் ஆனார்.
என் கையிலும் யாராவது புத்தகங்களை கொடுத்திருந்தால் நானும் மின்னியிருப்பேன் போலும், என்ன செய்வது நானே
புத்தகங்களை எடுத்துக்கொண்டேன் நட்சத்திரமாக இல்லை சூரியனாக ...
வயது என்பது உடலுக்கும்
தோற்றத்திற்கும் மட்டுமே! அறிவுக்கும் ஆற்றலுக்கும் வயது இல்லை என்பதை
இந்தக் கதை எனக்கு உணர்த்தியது.
அறிவு மட்டுமே கற்க கற்க முதிர்ச்சி
அடைவதில்லை இளமையாகிறது.
பசி
என்னும் பெருந்தீ
உலகில் நடக்கும் அதிக குற்றங்களுக்கு பசியும்
வறுமையும் தான் முக்கிய காரணமாக
உள்ளது. முத்துக்குமார் மாட்டு வண்டியில் பள்ளிக்குச் சென்றார். அந்த பள்ளிக்கு சொந்தமான
வண்டி அது. அந்த வண்டியை
ஓட்டுபவர் வறுமையின் காரணமாக வண்டியில் பயணிக்கும் மாணவர்களின் உணவை பிடுங்கி திண்பார்.
ஒரு நாள் இதை முத்துக்குமார்
தலைமை ஆசிரியரிடம் சொல்ல அந்த ஓட்டுநர் வேலை நீக்கம்
செய்யப்பட்டார்.
தான்
செய்வது தவறு என்று தெரிந்துமே
குழந்தைகளின் உணவை பிடுங்கி உண்பதன் காரணம்
என்ன?
வறுமையும் பசியும்!
வாணவேடிக்கை
வாண வேடிக்கை வண்ணமயமானது.
அவரவர் வாழ்வின் வாண வேடிக்கை வெவ்வோறு
உணர்வுகளை உடையது. மற்றவரின் உணர்வுகளாலான வாணவேடிக்கையை ரசிக்க முடியாது. அப்படித்தான் கவிதையும் தன் எண்ணத்தில் பிறந்த
கவிதை உயிரோட்டமானது. கடன் வாங்கிய எண்ணங்களின்
எழுதிய கவிதை காகிதக்கள் மட்டுமே.
வயதென்னும்
ரயில் வண்டி
இந்தச் சிறுகதையில் கால ரயில் வண்டியில்
ஏறுகிறார் நா.முத்துக்குமார். நிகழ்காலப் பெட்டியில் கடவுளைச் சந்திக்கிறார். கடவுள் முத்துக்குமாரை கடந்தகாலப் பெட்டிக்கு அழைத்துச் செல்கிறார். ஏனெனில் கவிஞர்கள் மட்டுமே அடிக்கடி அந்தப் பெட்டிக்குச் செல்கின்றனர். அவ்வப்போது அந்தப் பெட்டியின் காட்சிகள் ஞாபக மறதியால் அழிந்துவிடுகிறது
அதனை நினைவூட்டவே கடவுள் முத்துக்குமாரை இறந்தகாலம் பெட்டிக்கு கூட்டிச்செல்கிறார். சிறுவயதில் அவர் தவழ்ந்ததிலிருந்து அவர் குழந்தையை
கையிலேந்திய தருணம் வரை கண்முன் காட்டினார்
கடவுள். கடந்தகாலத்தில் நுழைவது இன்பமா அல்லது துன்பமா இல்லை இன்பம் கலந்த துன்பமா என்று முத்துக்குமாருக்கச் சொல்லத் தெரியால்லை.
கடந்தகால
கசப்புகளையும் இனிப்புகளையும் காகிதத்தில் கொட்டிவிடும் எழுத்தாளர்களுக்கு தான் தெரியும் கடந்தகாலத்தின்
ருசி.
பள்ளித்
தலமனைத்தும்
பள்ளிப் பருவம் அனைவருக்கும் கனாக் காணும் காலம் தான். நட்சத்திரங்களை எட்டிப் பறிக்கும் கனவு கொண்ட வயது அது. கவலைகள்
இல்லை கஷ்டங்கள் இல்லை பிறரின் வலிமை உணரத் தெரியாது. தன் வலியைத் தவிர
எதுவும் தெரியாது. பல வருடங்கள் கழித்து
அதே பள்ளிக்கச் செல்லும் போது என்ன உணர்வு
அது? எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சி அந்த உணர்வை தான்
இந்தக் கதையில் பதிவு செய்துள்ளார். சிலமணி நேரம் அந்த உணர்வுகளை அனுபவித்துவிட்டு
பள்ளியின் வாசலில் நினைவுகளை விட்டுச்சென்றுவிட வேண்டும்.
எமக்குத்
தொழில் கவிதை
‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு
கோடீஸ்வரர் ஆகலாம் என்ற கனவு நா.முத்துக்குமாருக்கு... இளம் வயது அனுபவம்
மட்டுமே கற்றுக்கொடுக்கும்
பெட்டிக்கடை,
ஊதுவத்தி தயாரிப்பு, தங்க மீன், சட்டை விற்பளை போன்ற பல்வோறு வியாபாரம் செய்தார். இதன் இறுதியில் இவர்
கற்றுக் கொண்ட பாடம் இதுவே,
"ஒரு வியாபாரி
கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல்
போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும்
கவிதையே காணாமல் போய்விடும்"
புன்னகைக்க
மறந்த கதை
'இந்தக் கதையில் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. முத்துக்குமார் ஏன் எந்த புகைப்படத்திலும்
சிறக்கவில்லை என்ற கேள்விக்கு பதில்
கிடைத்தது.
கேமராவில் அழகிய தருணங்களை மட்டுமா படம்பிடிக்கிறோம். மறந்துபோகச் கூடாது என்ற நினைவுகளை கேமராவில்
பதிவு செய்கிறோம் அதுவே நமக்கு சிரிப்பை மறக்கடித்தால்…? அப்படி ஒரு நிகழ்வுதான் முத்துக்குமாருக்கு
ஒரு போட்டோ ஸ்டுடியோவில் ஒரு புகைப்பட
கலைஞனை பார்த்து உத்வேகம் அடைந்த அவர் 10-வது முறையாக தன்
தொழிலை மாற்றினார். அப்போது ஒரு நாள் காலையில்
அவசரமா ஒரு போட்டோ எடுக்கனும்
என்ற அழைப்பு வந்து கிளம்பினார். சென்ற இடத்தில் 5 வயது ஆண்
குழந்தை பிணம் ஒரு குடிசையின் முன் கிடந்தது. ஆம்!
அதை தான் படம்பிடிக்க வேண்டும்.
உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று அந்த சிறுவனின் கண்கள்கூட
மூடப்படவில்லை. கேமரா வழியாக முத்துக்குமார் இறந்துகிடந்த கண்களைச் சந்தித்தார், அன்றிலிருந்து அவர் கேமரா முன்னிலையில்
யாராவது சிரிக்கச்சொன்னால் அந்த நொடி அவர்
புன்னகைக்க மறந்தார்.
தீராத
விளையாட்டு
வாழ்க்கை என்ற விளையாட்டுக்கு முடிவே
இல்லை. இந்த உலகம் உள்ள
வரை அது தொடர்ந்து கொண்டே
இருக்கும். தாத்தா தந்தையினுள் வாழ்கிறார், தந்தை மகனுள் வாழ்கிறார். மகன் அவன் பிள்ளைக்குள்
வாழ்கிறான். இவ்வாறே வாழ்க்கையின் பயணம் நீண்டு கொண்டே இருக்கும். மகனுக்குள் தந்தை மட்டுமில்லை அவன் தாயும் இருக்கிறார்.
சில நேரங்களில் தந்தையும் தாயாக வேண்டியுள்ளது. இந்த உறவுகளுக்கு எல்லை
இல்லை. இதுவே ஒரு தீராத விளையாட்டு.
வீடென்பது
யாதெனில்
வீடு என்பது யாது?
நமது வீடு நமக்குச் சொந்தமானதா?
இந்தக் கேள்விக்கு உள்ளார்ந்த பதில் பெரும்பாலும் யாரும் அறிவதில்லை. ஆனால் முத்துக்குமார் அறிந்துள்ளார். பங்காளி சண்டை போட்டு பத்திரம் பதித்து வீட்டை தமதாக்குகிறோம். உண்மையில் அந்த வீட்டில் நாம்
நிரந்தரமாக இருந்துவிடுவோமா?
நம்
உடம்பே ஒரு வாடகை வீடுதான்
கொஞ்ச நாள் இருப்போம் அதற்குள் எத்தனைப் பொறாமை போட்டிகள்.
ஆச்சரியங்கள் நிறைந்த உலகில்
எதுவும் நிரந்தரம் இல்லை
ஏன் நீ உனக்கே
நிரந்தரம் இல்லை!
நிலாக்
காலம்
ஒவ்வொருவருக்கும் கல்லூரி நினைவுகள் நிலாக் காலம் தான். பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் நினைவுகள் முத்துக்குமாருக்கு நிலாக்கால நினைவுகள் இயற்பியல் இளங்களை பாடப்பிரவு, அந்த முதல் கல்லூரி
அனுபவம் யாராலும் மறக்க முடியாதது. புத்தகங்களில் இல்லாத பாடம் கல்லூரி கற்றுத்தரும், கூடவே இவர் எல்லாப் பத்திரிக்கைகளிலும்
கதை, கவிதை, கட்டுரை என எழுதினார்.
இந்த கதை என்
கல்லூரி நாட்களை ரசிக்க வைத்தது. காற்றடிக்கும் திசையில் பறக்கும் பட்டம் போன்றது கல்லாரி நாட்கள்.
வயிற்றுக்குள் இருப்பது வதங்கி சுருங்கியபோது கேன்டீன் உணர்த்தியது நண்பனது நட்பை…!
கனவின்
கைப்பிடியில்
நாம் அனைவரும் ஏதோ
ஒரு கனவின் கைப்படியில் தான் கைப்பாவையாக உள்ளோம்.
அந்த கனவுகள் சில சமயங்களில் வறுமையால்
கூட தோன்றியிருக்கலாம். அது நம்மை ஒரு
கதாப்பாத்திரமாக முடிவை நோக்கி கொண்டு சென்று உள்ளது. நா.முத்துக்குமார் அசிஸ்டென்ட்
டைரக்டராக பணியாற்றியபோது ஒரு வறுமையாளனின் கண்முன்னால்
உணவுப்பண்டங்களின் மீது கன்டினியூட்டிக்காக மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டபோது
அந்த இளைஞனின் தவிப்பை கூறியுள்ளார்.
இந்த சமூகத்தில் பிடித்த
வேலையை செய்பவர்கள் அரிதினும் அரிது வறுமைக்கு பயந்துதான் பெரும்பாலும் படிக்காத செய்யக்கூடாத வேலையையும் செய்கின்றனர்.
குறுக்கு
வொருத் தோற்றம்
காலம் நடத்தும் ஓட்டப்பந்தையத்தில் நாம் முன்னேறி வேகமாக
ஓடிக்கொண்டேதான் உள்ளோம். சிலமுறை இந்த வாழ்க்கை கடினமானதாக
தோன்றும். அப்போது பலமுறை மனதின் குரல் ஒலிக்கும் 'நாம் சின்னப்பையனாவே இருந்திருக்கலாம்'
என்று ஒரு மாயநாளில் நாம் சின்னக் குழந்தையாக
மாறிவிட்டோம் என்றால் என்ன ஆகும்? மெல்லிய
தோளும் வழந்து முளைக்காத பல்லும் இந்த தோற்றத்தில் நான்
BA படிக்கிறேன் என்று சொல்ல முடியுமா இல்லை இந்த நீண்ட கட்டுரையை படிக்க உங்களுக்கு தான் பொறுமை இருக்குமா?
“பத்து வயதில் பட்டாம்பூச்சியை துறத்துவோம்
பத்தொன்பது
வயதில் பருவஈர்ப்பை துறத்துவோம்
முப்பதாம்
வயதில் பணத்தை துறத்துவோம்
ஐம்பதாம்
வயதில் நிம்மதியை துறத்துவோம்
அதற்கு
மேல் நோயும் முதுமையும் நம்மை துறத்தும்!"
அவ்வளவு
தாள் வாழ்க்கை.
இன்பம்
என்பது ஒன்றுதான் அதைப்பெறும் வயதும் காரணமும் தான் வேறு!
முன்பனிக்காலம்
வாழ்க்கையில் நாம் புதிய புதிய
அனுபவங்களைப் பெறுவோம். அது
நமக்கு கற்றுக்கொடுக்கின்றன ஒருவன் கல்லூரிக் கல்வியை முடித்தப்பின்புதான் உண்மையான வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறான் அப்போது அவன் பாதுகாப்பு அரணில்
இருந்து விடுதலை பெறுகிறான். கையில் சேரும் பணம் அப்போதுதான் நிதி
மேலாண்மையை கற்றுத்தரும். வாழ்க்கையின் ஆரம்ப காலம் ஒரு முன்பனிக்காலமே!
பின்பனிக்காலம்
வேலைக்குச் சென்று அப்படியே சில வருடங்களை கழித்தால்
அது பின்பனிக்காலம். முன்பனியில் குளிர் கொஞ்சம் சௌகரியமற்றதாகத் தான் இருக்கும். போகப்
போக பழகிவிட்டால் பின்பனிக்காலம் வந்துவிடும்.
சினிமா என்ற சுட்டெரிக்கும் வெயிலில்
காய்ந்தபோது புத்தகங்களே இவருக்கு நழலாக அமைந்தது. கதை, கவிதை, கட்டுரை
என்று இவர் தன் எண்ணத்தை
பேனா வண்ணத்தில் நீட்டிக் கொண்டிருந்தார். நக்கீரன் குழுமத்தில் ‘சிறுகதைக் கதிர்' என்ற இதழுக்கு துணை
ஆசிரியராக நேரும் வாய்ப்பு முத்துக்குமாருக்கு கிடைத்திருந்தது.
இளவேனிற்
காலம்
இயற்பியலில் இளங்கலை படித்துவிட்டு தமிழ் பாடத்திற்கு முதுகலை பட்டப்படிப்மற்கு பச்சையப்பன் கல்லூரியில் விண்ணப்பத்திருந்தார். பலபேரின் அறிவுரைகளை உதறித் தள்ளிவிட்டு தனக்கு கிடைத்த பி.டெக் சீட்டையும்
தூக்கி எறிந்துவிட்டு தமிழை கையில் எடுத்தார்.
ஆர்வத்தோடும் ஆசையோடும் கற்றால் கண்டிப்பாக தமிழ்த் தாய் கைவிடமாட்டாள். எப்படியாவது
பிழைக்க வைத்துவிடுவாள் என்பதை இவர் வாழ்க்கை கதையில்
தெறிந்து கொண்டேன்.
பச்சையப்பனில்
இருந்து ஒரு தமிழ் வணக்கம்
பல்வோறு கல்லூரிகளில் இலக்கியம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க பச்சையப்பனில் நாவலர் போட்டி வைத்து இரண்டு மாணவர்களை தேர்வு செய்வர். அந்தப் போட்டிக்கு முத்துக்குமாருக்கு கொடுத்த தலைப்பு சுதந்திரம் 63.வது நபராக மேடையில்
இவர் படித்த கவிதை…
"புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
என்னிடம்
இருந்து பறிக்கிறான்
பூனை
வளர்க்கும் சுதந்திரம்"
முதல்
பரிசு பெற்று நாவலர் ஆனார். இந்த மாதிரியானப் போட்டிகளில்
தலைப்பு 30 நிமிடம் முன்னர் தான் வழங்கப்படும். இந்தப்
பயிற்சியால் தாள் இவர் திரைப்படங்களுக்கு
சில நிமிடங்களில் பாடல் எழுதும் வித்தையைக் கற்றுக்கொண்டாராம். எந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும் 'பச்சையப்பனில் இருந்து தமிழ் வணக்கம்' என்று சொல்லி துவங்குவார்.
மைதானங்களும்
மரத்தடி நிழல்களும் பேசும்
கவிதை
பிறந்த கதையை !
பௌர்ணமி
காலம்
இந்த உலகம் அடுத்த
வினாடிக்குள் ஒளித்து வைத்து இருக்கும்
ஆச்சரியங்கள் ஏராளம்!
பௌர்ணமியன்று
தான் தண்ணீரில் வெள்ளிக்கிண்ணம் தோன்றும். முத்துக்குமார் அந்தக் கிண்ணத்தை அவர் வீட்டு கிணற்றில்
கண்டுள்ளார். அந்த கிணறுக்கு இன்னொரு
பெருமையும் உண்டு, அங்குதான் பலரும் ரசித்த 'தூர்' கவிதை பிறந்தது. 'தூர்' கணையாழியில் வெளிவந்து நிறைய பாராட்டுகளையும் கைத்தட்டல்களையும் பெற்றது.
கல்லூரி மாணவன் தான் என்று நினைக்காமல்
இது சிறந்த கவிதை என்று சிறப்பித்த சுஜாதாவை பாராட்டவா ? அல்லது மேடையில் இந்த கவிதைக்கு கிடைத்த
1000 ரூபாய் பரிசில் 500 ரூபா -வை "கணையாழியின் வளர்ச்சிக்கு கொடையளிக்கிறேன்" என்ற பச்சையப்பன் மாணவன்
முத்துக்குமாரை பாராட்டவா? என்று தெரியவல்லை.
தூரில் இருந்து சில வரிகள்...
"படை வென்ற வீரனாய்
தலைநீர்
சொட்டச் சொட்ட
அப்பா
மேலே வருவார்
இன்ற
வரை அம்மா
கதவுக்குப்
பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள்
கடைசி
வரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள்
தூர் எடுக்க."
குழந்தை
பருவத்திலேயே தாயை இழந்த முத்துக்குமார்
ஒரு மனைவியின் ஏக்கங்களை மகனாக தூர்வாருகிறார்.
பசித்த
புலியின் வேகம்
ஒரு எதிர்பாராத வெற்றி
நமக்கு இன்னும் பல வெற்றிகளை குவிக்க
தூண்டுதலாக அமையும். 'தூர்' வெற்றிக்குப் பின்பு சென்னை தி.நகரில் இருந்த
அறிவுமதியின் அறுவலகம் முத்துக்குமாருக் மற்றொரு பள்ளியானது. அறிவுமதிதான் பாடல்கள் எழுத கற்றுத்தந்தார். கிறிஸ்துவக்
கல்லூரயின் 'வனம்' என்ற இலக்கிய வட்டம்
மேலும் ஒரு படிகட்டாக இவருக்கு
அமைந்தது. அங்குதான் ஒரு முக்கியமான நபர்
நண்பர் ஆனார். இருவரும் சனி ஞாயிறுகளில் ஒன்றாக
தங்கி புத்தகங்களை புரட்டினர். அவர் வேறுயாரும் இல்லை
'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்' என்ற
படங்களின் இயக்குநர் ராம்!
குட்டிப்
புத்தரின் கேள்வி:
இந்தக் கதையில் வரும் குட்டிப் புத்தர் என்று முத்துக்குமார் தன் மகனை தான்
சொல்கிறார்.
மகன் கேட்ட கேள்வி
அவரை நிந்தித்தது. வாழ்க்கை என்பது என்ன? வரலாறு என்பது என்ன? என்பது தான் கேள்வி.
உண்மையில்
வாழ்க்கை என்பதுதான் என்ன? வாழ்ந்த பிறகு, காலம் பேசும் வரலாறு தான் என்ன? அதை
நாம் கேட்டுக்கொண்டா இருக்கப் பேகிறோம்? இதற்கு அனைவரும் தன் மனதளவில்தான் பதிலைத்
தேட வேண்டும் என்று எண்ண வைக்கிறார் முத்துக்குமார்.
வாழ்க்கை மனசாட்சி என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட
எறும்பா?
மனதளவில்
தேடியதில் ஒரு குரல் ஒலித்தது.அது,
இந்த
வாழ்க்கை ஒருவரிடமிருந்து வருகிறது, மற்றவர்களின் பிரதிபளிப்புகளே செயல் ஆகிறது. நல்லது கெட்டது என்பது மற்றவர் பார்வையை பொறுத்தது. வாழ்க்கை நெறிகள் மனசாட்சியால் உருவான ஒற்றையடி பாதை! அந்நெறியில் சென்றாலும் செல்லாவிட்டாலும் பாதை முடிவில் அனைவரும்
பிணம் தான்!
இவன்
அவனாகும் அத்தியாயம்
அழுகையின் வரலாற்றை கூறும் தொகுப்பு இது. அழுதுதான் பிறந்தோம்,
பிறரை அழவைத்து தான் செல்கிறோம். அழுகைக்கு
பாலினம் இல்லை, சாதி மதம் இல்லை
முக்கியமாக வயது தேவை இல்லை
கவலை, கோவம், ஏக்கம், பரிதாபம், மகிழ்ச்சி, நட்பு, காதல், பிரிவு போன்ற அனைத்து உணர்வுகளுக்கும் உச்சகட்ட வெளிப்பாடு அழுகை தான்.
பட்டாம்பூச்சி
விற்ற கதை
தன் கவிதை புத்தகத்தை
வெளியிடுவதில் இருந்த தடைகள் பற்றியது இந்த தொகுப்பு.
முன்பெல்லாம் இளம் கவிஞர்கள் மற்றும்
புதிய எழுத்தாளர்கள் எவ்வளவு சிரமப்பட்டனர் என்று இந்தக் கட்டுரையில் முத்துக்குமார் கூறுகிறார். தனது முதல் கவிதை
தொப்குபான ‘தூசிகள்' என்ற புத்தகத்தை வெளியிட
கடனும் அடகு கடையும் தான்
உதவியது. ‘தூர்’ கவிதைக்குப் பின்பு பல பத்திரிக்கைகளில் இவரது
கவிதை வெளிவந்தது கவனிக்கப்பட்டன. அவற்றுக்கு எல்லாம் 'பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற தலைப்பிட்டு ஒரு
சில பதிப்பகங்களை அணுகினான். இறுதியில் அறிவுமதியின் உதவியால் இயக்குநர் பாரதிராஜா முத்துக்குமாருக்கு அறிமுகமானார். அவருடைய தலைமையில் தான் புத்தக வெளியீட்டு
விழா நடந்தது. இது போல ஒவ்வொரு
புத்தக அச்சு மைக்கள், காகிதத்திற்குள்ளும் ஒரு கவிஞன் கஷ்டங்களும்
உணர்வுகளும் புதைந்து இருக்கின்றன. எந்த எழுத்தாளருக்கும் தன்
முதல் புத்தகம் பல போராட்டங்களின் புத்திரனாக
தான் இருக்கும்.
அவையிடத்து
முந்தியிருப்பச்
செயல்
ரத்தமும் சதையும் அல்ல…
இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!
-எழுத்தாளர் ஓரான் பாமுக்
தமிழில்
பிஹெச்.டி செய்துகொண்டிருந்தபோது எம்.ஏ முதலாம்ஆண்டு
மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொன்னார்கள். அப்படி வகுப்பு எடுத்து கொண்டிருந்தபோது இவர் தந்தை அதை
கவனித்துக்கொண்டிருந்தார்.
இதனை அறிந்த முத்துக்குமார் தனது பிள்ளை பருவத்தில்
தமிழ் ஆசிரியரான இவர் தந்தை வகுப்பெடுத்ததை
பார்த்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தார். அவர் வாயால் "நீ
நல்லா பாடம் எடுக்கிற" என்ற வார்த்தைகளில் இருக்கிறது தந்தை மகனின் நெருக்கம்.
முடிவுரை
முடிவில்லாத இந்த உலகில் முடிந்துவிடும்
நம் வாழ்க்கையில் என்ன தான் வேடிக்கைப்
பார்த்தோம்?
"சுடலையிலே வேகும் வரை
சூத்திரம்
இதுதான் கற்றுப்பார்!
உடலைவிட்டு
வெளியேறி
உன்னை
நீயே உற்றுப்பார்!
-நா.முத்துக்குமார்
காலம்
விழுங்கிய கவிஞர் நா.முத்துக்குமார் இன்னும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் எழுதிய பாடல்
வரிகளுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும். பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன் இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும், தான் கரைந்துவிடுவோம் என்பது
பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும் சூரியனைச் சிறைபிடித்த அந்த ஒரு கணத்தின்
பெருமிதமே பனிந்துளியின் வாழ்க்கை! மனிதனின் வாழ்க்கையும் அதுவே! இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு தலைப்பில் உள்ள குறிப்புகளும் வேடிக்கை
பார்ப்பவனை வேடிக்கை பார்த்து எழுதப்பட்டவை.
Comments
Post a Comment