ஏழாம் உலகம் - வாசிப்பு கட்டுரை, தீபிகா
ஏழாம் உலகம் - வாசிப்பு கட்டுரை, தீபிகா
கடந்த மாதம் எனது நண்பர் ஒருவர் , வாசிப்புப் போட்டி ஒன்று நிகழ இருப்பதாகக் கூறினார் . அதற்குப் பதிவு செய்யும் படிவத்தையும் அனுப்பினார் . போட்டியில் கலந்து கொள்ள அவ்வளவு ஈடுபாடு இல்லை என்றாலும் , கடந்த சில வாரங்களில் என்னுடைய வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே இருப்பதை உணர்ந்தேன் . என்னை மீண்டும் வாசிக்கும் பழக்கத்திற்கு ஈடுபடுத்திக் கொள்ள இப்போட்டியானது உதவும் என்று எண்ணி, இதில் கலந்து கொண்டேன்.
பொதுவாக நான் இதுநாள் வரை வாசித்தவைகளில் பெரும்பான்மையான படைப்புகள் , பிறர் எனக்கு பரிந்துரை செய்தவையாகவே இருக்கும். இப்போட்டியின் மூலம் ஒரு சிறிய மாறுதலாக , நானே வாசிப்பதற்கு நூல்களைத் தேட ஆரம்பித்தேன் . அவ்வாறு தேடும் போது பல்வேறு வகையான நூல்கள் என் கண்ணில் தென்பட்டன , இருந்த போதிலும் எழுத்தாளர் “ஜெயமோகன்” எழுதிய “ஏழாம் உலகம்”என்ற நூல் மட்டும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
ஏழாம் உலகம் என்ற நூலின் தலைப்பே நூலை வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது . போட்டியில் கலந்துள்ளேன் என்பதைக் காட்டிலும், இந்நூலில் அப்படி என்னதான் உள்ளது எனத் தெரிந்து கொள்ளும் முனைப்புடன் இந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன் .
நூலைப் படிக்க ஆரம்பித்தபோது இது ஒரு குடும்பத்தினுடைய வாழ்க்கையை சித்தரிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என எண்ணினேன். ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும்போது தான் இது ஒரு சமூகத்தின் நிலையை சித்தரிக்கக்கூடிய ஒன்று என்று அறிந்து கொண்டேன்.
இந்நூலில் பெரும்பான்மையாய் பேசப்பட்ட மக்கள் சராசரி மனிதர்களைக் காட்டிலும் உடலளவில் வளர்ச்சி குன்றியவர்கள் , ஏதேனும் ஒரு வகையில் பிறரைச் சார்ந்து வாழ்பவர்களாகத்தான் உள்ளார்கள் . இந்நூலை முழுமையாகப் படித்த பின் நான் மனதளவில் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால் , உடலளவில் வளர்ச்சி குன்றியவர்கள் , மனதளவில் சராசரி மனிதர்களை விட என்றும் மேன்மை பெற்றவர்களாகத் தான் வாழ்கிறார்கள்.
அன்றாடம் இவர்களை நாம் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கூட பார்க்க மாட்டோம். அவர்களைப் பார்த்த ஓரிரு நிமிடங்கள் மட்டும் அவர்கள் மீதான ஒரு கரிசனம் தோன்றி மறைந்துவிடும் . பிறகு நாம் , நம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவோம்.
மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்களுக்கென ஒரு நல்வாழ்வு மையம் இருக்கும் , அதில் அவர்கள் நன்றாக பராமரிக்கப்படுவார்கள் என்று எண்ணினாலும் , ஓரிரு இடங்களில் அவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைப்பார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு. எனினும் அவற்றை எங்கோ நடக்கும் செய்தியாகத் தான் நாம் எடுத்துக் கொள்வோம் . அதை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையாக பெரும்பாலும் யாரும் கருதுவது கிடையாது .
இந்நூலின் மையப் பொருளாக பேசப்படுவது , குறை பிறவிகள் எனக் கூறப்படும் மாற்றுத்திறனாளிகளை ஒரு உயிராகக் கூட கருதாமல் , உயிருள்ள ஒரு சவமாக நினைத்து அவர்களைத் தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் கொடுமைப்படுத்தியும் , சித்திரவதை செய்தும் , பிச்சை எடுக்க வைத்தும் , அவர்களது உழைப்பையும் , அவர்களையும் சுரண்டி வாழக்கூடிய ஒரு பிற்போக்கு மனநிலை உடைய மனித சமுதாயத்தின் நிலையையே .
இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களும் முக்கியமானவையே , போத்திவேலுப் பண்டாரம் குறைபிறவிகளை விற்று , அதில் வாழ்க்கை நடத்தி வரும் பலருல் இவரும் ஒருவர் .
இதில் இவருடைய இரு வேறு மனநிலைகள் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது . தன்னுடைய குடும்பம் , மகள்கள் என்று வரும் பொழுது சிறிதளவு கூட குறை ஏதும் வைக்காமல் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து செய்கிறார் . ஆனால் இதுவே மாற்றுத்திறனாளிகள் என்று வரும்பொழுது அவர்களை உயிருள்ள ஒரு சவமாக மட்டுமே பார்க்கிறார் . அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் , தனிப்பட்ட வாழ்க்கை என்று இருப்பதை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை . அவரைப் பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள் என்றால் பணம் பெற்றுத் தரக்கூடிய விலைப் பொருட்கள். தான் செய்கின்ற செயலை நினைத்து அவருக்கு குற்ற உணர்ச்சி ஏதுமில்லை , தன்னை ஒரு நல்ல மனிதராகவேதான் கடைசி வரை எண்ணிக் கொண்டிருந்தார் .
இந்நூலின் நிஜக் கதாநாயகர்கள் என்றால், தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட , குறை பிறவிகளான பிச்சைக்காரர்களே. இரு வேறு மனிதர்களின் உலகை இந்நூல் ஆராய்கிறது , ஒரு பக்கம் பிச்சைக்காரர்கள் பணம் சம்பாதிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கான சுதந்திரத்தோடு வாழக்கூடாது என்றும் அவர்கள், வியாபாரிகளால் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும், அடிமையாக்கப்பட்டும் உள்ளார்கள். இவர்களின் வாழ்வியல் சூழலைத் தெளிவாக இந்நூல் வெளிப்படுத்துகிறது. அவர்கள் உண்ணும் உணவு , தங்கும் இடங்கள் , தங்களுடைய உடல் நலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடைசி மூச்சு வரை இவ்வுலகில் வாழ்ந்து விட வேண்டும் என்றே எண்ணுகிறார்கள் .
முன்னாளிலே ஏழ்மை காரணமாகவும் , வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதன் காரணமாகவும் , மக்கள் கோயில்களிலும் , தெருக்களிலும் , பிச்சை எடுத்தவர்கள் அதிகம் . இந்நூலிலோ , மேற்கூறிய காரணங்கள் மட்டுமல்ல குறைபிறவிகள் , குழந்தைகள் , நோயாளிகள் என அனைவரையும் தன்னுடைய சுய தேவைக்காக அடிமைகளாக்கி ஒரு பொருளாகவே அவர்களை மாறச் செய்து , ஒரு அடிமை வாழ்க்கையை வாழ வைக்கும் மனிதனின் கொடூர மனநிலையைக் கூறியள்ளது .
எவ்வளவுதான் தாழ்த்தப்பட்டு அடிமையாகப்பட்டு வாழ்ந்தாலும் , இந்நூலில் கூறப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் , தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள் .
உதாரணமாக முத்தமை என்று ஊனமுற்ற பெண் , ஒரு ஊனமுற்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் , பிறந்த குழந்தையும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தை தான் . தன்னைப்போலவே ஊனமுற்ற குழந்தை பிறந்து இவ்வுலகில் துன்பப்பட வேண்டாம் என்று நினைத்து , பிறந்தவுடன் அதனைக் கொன்றுவிடுங்கள் என்று கதறினாள் . நேரம் செல்லச் செல்ல இவனும் இவ்வுலகில் வாழட்டுமே என்று நினைத்து தானும் ஒரு தாய் என்கிற பூரிப்புடன் , பாசமாக அக்குழந்தையை பராமரிக்கத் தொடங்கினாள் .
தன்னுடைய வாழ்க்கை இப்படி அடிமையாகப்பட்டுள்ளது என்று எண்ணி கவலை கொள்ளாமல் , தன்னால் முடிந்தவரை எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்றுத் திறம்பட ஆங்கிலம் பேசும் அகமது , கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் அறிவுரையும் , ஆலோசனையும் தருகின்ற இராமப்பன் , தான் ஒரு முடம் என்றாலும் ,தன்னை மீண்டும் அடிமை வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணி தனக்கு தாலி கட்டிய பெருமாளுடன் இணைந்து , ஒரு குடும்பப் பெண்ணாக வாழ வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் எருக்கு , எனப் பலர் அவர்களுடைய சுதந்திரமான வாழ்க்கையை இழந்திருந்தாலும் , அவர்களுக்கென்று உரிய சில ஆசையுடன் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள் . இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது மாங்காண்டி சாமி தான் , அக்கூட்டத்தில் ஒரு சாமியாராக வாழ்பவர் , பாடுவதற்காக மட்டுமே வாய் திறப்பார் . அவர் பாடுகின்ற பாடல்கள் அனைத்தும் கேட்போரைத் தன் வயப்படுத்துவது போல் இருக்கும் .
நூலில் உள்ள ஒரு சில பகுதிகள் , நம் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளச் செய்கின்றன . வரலாற்று நிகழ்வுகளாக நாம் அறிந்தது , ஆங்கிலேயர்களால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றே . அதிலும் அடித்தட்டு மக்கள் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் . தற்போது நாம் சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர் இடமிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் , இப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் , குறைபிறவிகள் , எனப் பலர் இன்றளவும் தங்கள் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள் . இதனை இந்நூல் வெளிப்படையாகக் கூறியுள்ளது .
ஒரு பக்கம் குறைபிறவிகளான பிச்சைக்காரர்களைப் பற்றி கூறிக்கொண்டே , அதற்கு நிகராக அவர்களை விற்றுப் பயன்பெறும் கொடூர மனித சமூகத்தைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது .
என்னதான் குறை பிறவிகளை விற்று அதில் வாழ்க்கை நடத்தி வந்தாலும் , பண்டாரத்திற்கும் , பிச்சைக்காரர்களுக்கும் ஓரிரு இடங்களில் சில ஒற்றுமை உண்டு .
உதாரணமாக கதையின் ஒரு பகுதியில் குய்யன் , ராமப்பனிடம் எவ்வாறு நீங்கள் பணத்தை பெருமாளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துள்ளீர்கள் ? என கேட்டபோது அதற்கு ராமப்பன் , அவன் வந்ததும் எங்கெல்லாம் பணத்தைத் தேடுவான் என்று நீ கவனிக்க வேண்டும் , அதன் பிறகு நீ பணத்தை மறைத்து வைத்துக் கொள்ளும் சூட்சுமத்தை நீ பழகிக்கொள்வாய் என்று கூறினார் . அதேபோல் கதையின் இன்னொரு பகுதியில் , காவல் நிலையத்திற்குச் சென்ற பண்டாரத்திடம் , காவலாளிகள் அவரை அடித்து உதைத்து அவருடைய உள்ளாடைக்குள் வைத்திருந்த பணம் முதற்கொண்டு அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள் . இருந்தபோதிலும் , ஓரிரு பணத்தாள்களை தன்னுடைய காலுறைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார் பண்டாரம் .
யார் வேண்டுமானாலும் யாரையும் அடிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றிருந்தாலும் , உலகில் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பிறரிடம் அடிமையாகத் தான் உள்ளார்கள் . அடித்தட்டு மக்களாயினும் , உயர்ந்த மக்களாயினும் , யாராக இருந்தாலும் தங்களின் உடைமையைப் பிறரிடம் இருந்து மறைத்து வைத்து வாழ்ந்தால் மட்டுமே தனக்குரியதை செய்து கொள்ள முடியும் என்ற நிதர்சனமான உண்மையை இந்நூல் கூறுகிறது .
அதேபோல் , இந்நூலில் பிள்ளைப் பாசம் பற்றி பல இடங்களில் பேசப்பட்டுள்ளது . குறை பிறவியான முத்தம்மை 18 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறாள் . அவளுடைய குழந்தைகள் அனைத்தையும் பண்டாரம் விற்றுப் பணம் ஈட்டிக் கொண்டார் . ஒவ்வொரு முறையும் அவள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஊனமாக இருந்தாலும் , “காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது போல் பார்த்து பார்த்து வளர்ப்பாள் . இருந்தபோதிலும் , குழந்தையைப் பெற்ற ஓரிரு வாரத்தில் அவளிடம் இருந்து அவளுடைய குழந்தை பறிக்கப்படும் . குழந்தையைப் பிரிந்த சோகம் தாங்காமல் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் உணவு உண்ணாமல் சோகத்திலேயே ஆழ்ந்திருப்பாள் . அதேபோல் மீண்டும் அவளுக்கு குழந்தை பிறந்தது , எப்பொழுதும் போல் ஊனமுற்ற குழந்தைதான் மறுபடியும் பிறந்திருந்தது . இதற்குக் காரணம் , பண்டாரம் , அவருடைய வியாபார நோக்கத்திற்காக உடல் ஊனமுற்ற ஒருவனிடம் மட்டுமே முத்தம்மையை உடலுறவு கொள்ளச் செய்வார் . அந்த வகையில் தொரப்பன் என்ற கண் தெரியாதவனுக்கும் முத்தம்மைக்கும் பிறந்த அந்தக் குழந்தையை தொரப்பன் தொட்டு பார்க்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் வந்தது , காரணம் , தனக்கும் ஒரு குழந்தை உள்ளது என்பதை எண்ணி அவன் மகிழ்ச்சி அடைந்தான் .
பண்டாரம் தனது மகளின் திருமணத்திற்காக பணத்தேவை ஏற்பட்டது , அதன் காரணமாக முத்தம்மையின் குழந்தையை மறுபடியும் விற்று விட்டார். எப்பொழுதும் போல் முத்தம்மை தன்னுடைய குழந்தையைப் பிரிந்த வருத்தத்தில் உறைந்து இருந்தாள். ஆனால் பண்டாரம் அதை பொருட்படுத்தாமல் , ஒருவாரம் போகட்டும் அதன் பிறகு அவள் பழைய நிலைக்குத் திரும்பி விடுவாள் எனக் கூறி விட்டு , தன்னுடைய வேலையை கவனிக்க சென்றார் .
கதையின் இன்னொரு தளத்தில் பண்டாரத்திற்கு மூன்று மகள்கள் . பிள்ளைகள் என்றால் அவருக்கு அத்தனை இஷ்டம் . இதற்கு சான்றாக அவர் ஒருமுறை வேலை நிமித்தமாக பழனிக்குச் செல்லும் பொழுது , அவருடைய கடைசி மகள் மீனாட்சி , அவரிடம் தனக்கு வளையல் வாங்கி வர வேண்டும் என்று கூறியிருந்தாள் . ஆனால் , அவர் வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அதை வாங்க மறந்துவிட்டார் . வீட்டிற்கு வந்ததும் மகள் கோபித்துக் கொண்டாள் . உடனே அவர் , நடு இரவு என்று கூட பாராமல் மீண்டும் நகை செய்யும் இடத்திற்கு சென்று தன் மகளுக்காக வளையல் ஒன்றை செய்து அதை வாங்கி வந்து மகள் கண் விழிக்கும் முன் அவளிடம் கொண்டு வந்து வைத்து விட்டார் .
மகள்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொடுக்க எண்ணும் ஒரு பாசமிகு தந்தையாக இதில் பண்டாரம் சித்தரிக்கப்பட்டுள்ளார் . அப்படிப்பட்ட அவருடைய வாழ்விலும் தன்னுடைய மகள்களை பிரிக்கின்ற தருணம் வந்தது . அவருடைய இரண்டாவது மகளான வடிவம்மை வீட்டில் உள்ள நகை , பணம் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு , விபச்சார தொழில் செய்யும் ஒருவனுடன் சென்றுவிட்டாள் . மூத்த மகளான சுப்பம்மையோ , திருமணம் முடிந்தவுடன் சொத்துரிமையை கேட்கிறாள் .
அவருடைய மகள்கள் பிரிந்து செல்லும் பொழுது அவருக்கு ஏற்பட்ட மன கஷ்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . அவருக்கு வழியை தரக்கூடிய ஒரு செயல் பிறருக்கு நடக்கும் போது அவர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை . தன்னை வேண்டாம் என்று உதறிவிட்டுச் சென்ற தன் மகளான வடிவம்மையை , பண்டாரத்தின் மனம் ஏனோ தேடிக் கொண்டே தான் இருக்கிறது . அதை நினைவு கூறும் விதமாக அவர் தன்னுடைய வாழ்வில் , தன்னுடைய குழந்தைகள் சிறு வயதாக இருந்த பொழுது உண்டான அழகிய காலங்களை நினைவுகூர்ந்து வருத்தம் கொள்கிறார் . ஆனால் அவர் , முத்தம்மையின் குழந்தையை அவளிடம் இருந்து பிரிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் அவளுக்கும் அதே வழி தான் இருக்கும் என்பதை அவரின் மனம் எனோ கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை .
இந்நூலில் பல்வேறு இடங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் , சராசரி மனிதனின் வாழ்க்கையும் ஒப்பமைசெய்யும் பல நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளது . உதாரணமாக பண்டாரம் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக மணமகனை , நகை , பணம் என பலவற்றை கொடுத்து ஒரு வியாபாரப் பொருளாக வாங்குகிறார் . அதற்கு ஈடாகத் தன்னிடம் உள்ள உருப்படிகள் ( அதாவது குறை பிறவிகள் ) எனக் கூறப்படும் மாற்றுத் திறனாளிகளை விற்றுப் பணம் பெறுகிறார் .
இதில் கூறப்பட்டுள்ள போத்திவேலுப் பண்டாரம் , பெருமாள் , வண்டிமலை , கொச்சன் , நாயர் போன்றவர்கள் நம் சமூகத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள் . அவர்களை பொருத்தமட்டும் குறை பிறவிகளுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கையோ , தேவையோ என்று எதுவும் இல்லை . இவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவே குறைபிறவிகள் படைக்கப்பட்டுள்ளனர் என்றே எண்ணுகிறார்கள் .
நூலின் ஆழம் செல்லச் செல்ல , குறை பிறவிகள் , தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதையும் மறந்து அவர்களை அடித்தும் , சித்திரவதை செய்தும் , மனிதர்களாகக் கூட அவர்கள் பாவிக்கப்படாமல் , தங்கள் மீது கூட உரிமை கொண்டாட முடியாமல் ஒரு அவல நிலையில் வாழ்கின்றவர்களின் வலியை தத்ரூபமாக உணர முடிந்தது . இப்படிக் கூட ஒரு உலகம் இருக்கக் கூடுமா என்று நான் திகைத்துப் பார்த்த நூலாகும் .
தங்களை இவ்வளவு கொடூரமாக பாவிக்கும் மனிதர்களிடையே , தங்களின் வாழ்க்கை நிலை இதுதான் என ஏற்றுக்கொண்டு உயிருள்ளவரை எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று மனநிலையில் வாழ்கின்ற இவர்களைப் பார்க்கும் போது , இவர்களிடத்தில் உள்ள மனதிடத்தை இன்னமும் வியந்து கொண்டு தான் உள்ளேன் .
சராசரி மனிதர்களுக்கு எத்தனை செல்வங்கள் வளங்கள் இருந்தாலும் போதாது . உதாரணமாக , பண்டாரத்தின் மகள் திருமணத்தில் – விருந்தினர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் , மகளுக்கு லட்சம் மதிப்பிலான பணமும் நகைகளும் தர வேண்டும் எனவும் பல்வேறு வகையில் பணம் ஈட்டிக் கொண்டு இருந்தார் . மறுபக்கம் பார்த்தல் , குறை பிறவிகளாகப் பிறந்திருந்தாலும் , பிச்சை எடுத்து அதில் வரும் சிறிதளவு பணத்தை தன்னுடைய உணவுத் தேவைக்கும் வைத்துக்கொண்டு , பிறருக்கும் கொடுத்து வாழ்கிறார்கள் .
“ஏழாம் உலகம் “ என்ற தலைப்பை பார்க்கும் பொழுது , ஏழு சொர்கலோகங்கள் , ஏழு பாதாள லோகங்கள் உண்டு என்பது நினைவிற்கு வந்தது . சொர்க்கலோகத்தில் உள்ள ஏழாவது உலகமான சத்யலோகம் பற்றியோ , அல்லது பாதாள லோகத்தில் உள்ள ஏழாவது உலகமான பாதாளம் பற்றியோ விரிவுரை நூலாக இருக்கும் என எண்ணினேன் .
நூலைப் படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது , நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வுலகமே பாதாள உலகத்தில் நடக்கின்ற கொடூரங்களால் நிறைந்துள்ளது என்று . பாதாள உலகத்தில் மட்டுமே கொடுமைகள் நிகழ்கிறது என்று இல்லை , நம்மைச் சுற்றியுள்ள இக்கொடூரமான சமூகத்திலும் அதர்மங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்நூலின் எழுத்தாளர் தெரியப்படுத்துகிறார்.
இந்நூலில் கூறியுள்ள கருத்துக்களைச் சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொண்டே செல்லலாம் . ஒவ்வொரு இடத்திலும் மனிதனின் மனநிலை எவ்வாறு உள்ளது , அது இடத்திற்கு ஏற்றார்போல் எவ்வளவு வக்கிரமாக செயல்படுகிறது என்பதை இந்நூல் தெளிவாகக் காட்டியுள்ளது .
எத்துணை காலங்கள் சென்றாலும் இந்நாவலில் கூறப்பட்டுள்ள பண்டாரம் போன்ற ஆட்களும் , குறை பிறவிகளாய்ப் பிறந்து கோயில்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த மாற்றுத்திறனாளிகளின் எதார்த்தமான வாழ்க்கை நிலையும் , மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தெரிகிறது .
இந்நூலை படித்ததின்
விளைவாக ,
ஒரு வார காலமாக என் கனவுகளில் , இந்நூலில் வரும் கதாபாத்திரங்களுடன் நான் பயணம் செய்தேன் . நான்
படித்த நூல்களில் , வெகுவாக என்னைப் பாதித்த நூல் என்றால் அது இதுதான் . இந்த நாவலின்
தாக்கத்தால் நான் அறிந்து கொண்டது என்றால் , “ நாம் என்னதான் சுதந்திரம் பெற்ற நாட்டில் வாழ்ந்தாலும் மக்களை
இன்னும் அடிமைத்தளத்தில் வைத்திருக்க வேண்டும் என எண்ணுகின்ற இருண்ட சமூகத்தில்
தான் நாம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” .
Comments
Post a Comment