பாம்பும் பிடாரனும் - வாசிப்பு, தீபிகா.

 பாம்பும் பிடாரனும் - வாசிப்பு, தீபிகா. 

பரந்து விரிந்த இச்சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும், ஏதேனும் ஒரு வகையில், ஒருவருடன் ஒருவர் உறவு என்ற பாலத்தின் வழியாகத் தொடர்பு கொண்டு தான் உள்ளார்கள். அத்தகைய உறவானது எத்தகைய தன்மையில் இருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இக்கதை நமக்கு அளித்துள்ளது.

இக்கதை, தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு பாம்பிற்கும், மனிதனுக்கும் இடையேயான ஒரு பிணைப்பைக் கூறும் விதமாக அமைந்துள்ளது. இதனை ஆரம்ப கட்டத்தில் வாசிக்கும் பொருட்டு மேற்கூறிய கருத்து முதலில் புலப்படும். இச்சிறுகதையின் மையக்கருத்தை உணர வேண்டுமானால், இதன் உள்ளார்ந்த உவமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இக்கதையில் வருகின்ற பாம்பின் நிலையை முழுக்க முழுக்க ஒரு “பெண்ணின்" வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஒரு இடத்தில் இத்தனை நாட்களாக பிடாரனின் மகுடிக்குப் பழக்கப்பட்ட பாம்பின் நடவடிக்கை அன்று மட்டும் ஏனோ விசித்திரமாக இருப்பதாகவும் அதனை பிடாரனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றிருக்கும். பெண் என்பவளும் இத்தகையே! பெண் என்பவள் எப்பொழுதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே விளங்குவாள். பாம்பு தனது சூழலிற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும், அதுபோல பெண் என்பவளும் தன்னைத் தனது சுழலுக்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்வாள்.

இதில் கூறியுள்ள பாம்பு மற்றும் பிடாரனின் உறவு முறையைச் சமுதாயத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற கணவன் மனைவி உறவோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலும். எந்த ஒரு உறவு முறையை எடுத்துக் கொண்டாலும், அந்த உறவு நிலையில் உள்ள இருவரில் ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராகவும், இன்னொருவர் அதற்கு பணிந்து செல்பவராகவும் இருப்பர். இந்த கணவன் மனைவி உறவில், ஆண் - பெண் என இருவரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெவ்வேறு சூழல்களிலும், வெவ்வேறு வழிகாட்டுதல்களிலும் வளர்ந்து, பின் இந்தச் ஒப்புதலோடு திருமணம் என்ற ஒரு சொல்லின் ஊடே இணைந்து வாழ முற்படுகிறார்கள். தத்தம் இருவரும் வெவ்வேறு சிந்தனைகள், கருத்துக்கள் எனக் கொண்டிருந்தாலும் அன்பின் நிமித்தம்அதை அனைத்தையும் ஒன்றாக்கி அந்த உறவில் பயணிக்க வேண்டிய சூழலிற்குத் தள்ளப்படுவர். எத்தனை துயரங்கள் இருந்தபோதிலும் பாசப்பிணைப்பு என்ற அந்த ஒற்றைச் சொல்லின் காரணமாக அந்த உறவில் விளைகின்ற அனைத்து ஊடல்களையும் தாண்டி அந்த உறவானது நிலைத்து நிற்க முற்படுகிறது. பெரும்பான்மையான உறவுகளில், பெண் என்பவளே பணிந்து செல்பவளாகவும், ஆண் என்பவன் ஆதிக்கம் செலுத்தக்கூடியவனாகவும் இருக்கக்கூடும்.

பொதுவாக ஒருவர் ஆதிக்கம் செலுத்த, இன்னொருவர் அதை ஏற்று வாழ்வது என்பது அன்பினால் கட்டமைக்கப்பட்ட உறவாக இல்லாமல், அடிமைத்தன வாழ்க்கையாகவே இருக்கக்கூடும். அன்பு என்ற அந்த உறவின் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்ற இந்த அடிமை வாழ்க்கையை ஏன் நாம் வாழ வேண்டும். என்று ஒரு பெண் நினைக்கும் பொருட்டு, அந்த உறவின் நீட்சியானது கேள்விக்குறியாகிவிடும். இத்தனை நாட்களாக கணவனின் உபதேசங்களையும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையை மட்டுமே எதிர்கொண்டவள், அதை அனைத்தையும் நிராகரித்துவிட்டு, இவர்களைத் தாண்டி வெளியில் அமைந்திருக்கின்ற கட்டுப்பாடு இல்லாத, சுதந்திரமான உலகிற்குள் அவள் செல்ல முற்படும்போது, எத்தனை தடைகள் வரக்கூடினும் அதனை எதிர்க்கத் துணிந்து விடுவாள். இத்தனை நாட்களாகத் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் காட்டுகின்ற வழிப் பாதையில் சென்றவள், தன்னைப் போன்ற பெண்கள் இத்தகைய அடிமை வாழ்க்கையில் இல்லாமல், தன்னுடைய வாழ்க்கையின் அமைப்பைப் பிறரிடம் ஒப்படைக்காமல், சுதந்திரமாக வாழ்வதை அவள் சுயமாக என்னும் பொருட்டு, இந்த அடிமை வாழ்க்கையைத் முற்படுவாள். எத்தனை கால உறவாயினும் அந்த உறவில் உள்ள ஒருவருக்கு, இதில் நாம் நிச்சயம் பயணிக்க வேண்டுமா என்ற எண்ணம் எழுகின்ற போது, அந்த உறவானது அங்கேயே முடிந்து விடுகிறது.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, கதையின் மற்றொரு கதாபாத்திரமாக மாமன் என்ற கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இக்கதையில் இடம்பெற்றுள்ள மாமனின் கதாபாத்திரமானது, நமது முன்னோர்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. அவன் தனக்குக் கீழே இருக்கும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகவும், வாழ்க்கை நெறிமுறைகளைப் பகிர்ந்து கொடுப்பவனாகவும் விளங்குகின்றான். அது ஆபத்தானதாகவே இருந்தாலும், அதனை அழிக்காமல், பக்குவமாக கையாள்வது உயிரின் மதிப்பை உணர்த்துகிறது. அவன் பாம்புகளை ஆவேசமாகவோ அல்லது அவற்றை அச்சுறுத்தும் வகையிலோ கையாளாமல், பொறுமையுடன் அவற்றை அணுகிஅவற்றுக்கான இடத்தில் அதனைக் கொண்டு சேர்த்து அதனைப் பாதுகாக்கிறார்.

இவரது இச்செயல்களை ஒரு உறவு நிலையை வைத்து ஒப்பிட்டு பார்க்கையில், உறவின் மையக் குணங்களான பொறுமை, பாதுகாப்பு, சமநிலை, பரஸ்பர மரியாதை என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இதில் நாம் உற்று நோக்க வேண்டிய மற்றொரு கருத்தும் உள்ளது. மாமன் ஒருநாளும் பாம்புகளைத் தன்னுடைய சுய தேவைக்குப் பயன்படுத்தியது கிடையாது. இயற்கையின் அருளாலும், முன்னோர்களின் சிருஷ்டியாலும், அவர் பாம்பினுடைய பாதுகாவலராகவே தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்துள்ளார். பிடாரன். பாம்பினைத் தன் பிழைப்பிற்காகப் பயன்படுத்திக் கொண்டான். என்னதான் அதனுடன் இணக்கமாக இருந்தாலும், அவனுடைய செயலில் சுயநலம் கலந்திருந்தது. இதனை உறவின் அடிப்படையில் பார்க்கும் போது, மாமனின் செயலே நாம் பின்பற்றத் தகுந்த ஒன்றாகும்.

“பாம்பும் பிடாரனும்” என்ற தலைப்பை வாசிக்கும் பொழுதே ஒன்று இல்லையேல் இன்னொன்று முழுமை பெறாது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. உறவு நிலை என்பது ஒரு பாலத்தின் இரு தூண்கள் போன்றது இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் அந்தப் பாலம் (உறவு) உடைந்து விடும். ஒர் உறவு என்பது எத்தனை காலங்கள் நீடிக்கின்றது என்பது பெருமைக்குறியது அல்ல, அந்த உறவில் உள்ளவர்கள் தத்தம் ஒருவரை ஒருவர் எந்தவிதப்பாகுபாடும் இல்லாமல், பரஸ்பரம் மரியாதையுடனும், அவர்களுக்குரிய தனி விருப்பத்துடனும் அவர்களைச் செயல்பட அனுமதிக்க வேண்டுதலே பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த ஒரு உள்ளார்ந்த உண்மை நிலையையே, பாம்பு மற்றும் பிடாரன் ஊடாகக் கதை ஆசிரியர் நமக்குக் கூறுகிறார்!

Comments

Popular posts from this blog

அறிமுகம்

ஏழாம் உலகம் - வாசிப்பு கட்டுரை, தீபிகா

வேடிக்கை பார்பவன் வாசிப்பு - ஸ்ரீவித்யா